படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Monday, November 7, 2011

ஒரு சிறிய நினைவுகூறல் - 3

சில வருடங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் கணக்கு தொடங்கியவுடன், எங்கள் பள்ளியின் பெயரைக் கொண்டு தேடியதில், கிடைத்த அந்த நண்பரின் புகைப்படத்தினை கண்டவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பேஸ்புக்கின் உதவியால் சில நிமிடங்களில் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். எங்களது பேச்சு சில மணிகள் கடந்தும் தொடர்ந்தது. பல தொடர்புகள் தொலைந்து போன நண்பர்களின் மீள் அறிமுகம் கிடைத்தது. நீண்ட நேரம் அவர் நினைவாகவே இருந்தது.

சிறு கடந்த கால அறிமுகம்: பள்ளியில் என்னுடன் விடுதியில் தங்கிப்படித்த அந்த நண்பர் இறுதித்தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியுற்றார். நாங்கள் படிக்கும் காலத்தில் நல்ல நண்பர்களாக இருந்துள்ளோம் ஆனால் கடிதம் தவிர ஏனைய தகவல்தொடர்புகள் பிரபலமாகாத காலம் அது என்பதால் பள்ளி இறுதி வகுப்பிற்குப் பின் அவருடன் தொடர்புகொள்ள இயலாமல் போய்விட்டது. அவர் பெற்ற தோல்வியும், மற்றவரிடம் தொடர்பு கொள்ள இயலாத மனநிலையை அவருக்கு ஏற்றபடுத்தி விட்டது. அந்த காலகட்டத்தில் அவருக்கு ஏற்பட்ட அவமானங்கள் ஏராளம்.

அதன்பிறகு மனம் தளராமல் அடுத்த ஆண்டு அந்த பாடத்தில் தேர்ச்சி பெற்று, இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளையும் முடித்து விட்டார். தற்சமயம் திருமணம் முடித்து அமெரிக்காவில் அவர் துறைசார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இன்று அவர் வாழ்க்கையில் வெற்றி பெற்றாலும் பட்ட அவமானங்களும் வேதனைகளும் இன்றும் அவரின் நினைவில் உள்ளது.

தேர்வில் தோல்வியடைவதை, வாழ்வில் தோல்வியடைவதைப்போல் ஏன் சமுதாயம் சித்தரிக்கவேண்டும். இதன் உச்சகட்டம் தான் நிறைய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது. சமீப காலங்களில் இத்தகைய தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒருவன் தேர்வில் தோல்வியடையும் போது இச்சமுதாயமும், பெற்றோர் மற்றும் நண்பர்கள் மிகவும் பொறுப்புடன் இருக்க வேண்டும். பாடத்தில் தோல்வி என்பது வாழ்க்கையின் தோல்வி அல்ல. வாழ்க்கையில் சிறு தடைதான். அதிலிருந்து அவன் மீள்வதற்குரிய சூழ்நிலையை நாம் உருவாக்கித் தர வேண்டுமே தவிர அவனை குற்ற உணர்ச்சியில் தவிக்க விடக்கூடாது.

பள்ளித் தேர்வுத் தோல்வியை ஏளனமாக்குபவர்களுக்கு என் நண்பனின் வாழ்க்கை ஒரு பாடமாக இருக்கும் என்ற எண்ணத்தில் இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

2 comments:

kaialavuman said...

தோல்விகளைத் தடைக் கல்லாகக் கருதாமல் வெற்றிப் படிக்கட்டாக ஆக்கிக் கொண்ட தங்கள் நண்பருக்கு வாழ்த்துகள். அவரைப் பற்றி பகிர்ந்து எங்களுக்கும் படிப்பிணையைத் தந்த தங்களுக்கு நன்றிகள்.

Lingesh said...

நன்றி வேங்கட ஸ்ரீனிவாசன் அவர்களே...

Post a Comment