படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Monday, January 25, 2010

தொலைக்காட்சி பெட்டி - ஒரு போதைப் பொருளா?

தொலைக்காட்சி பெட்டி - எத்தனை வலிமையான, உலகம் முழுவதும் அனைத்து வயது மக்களும் அதிகம் பயன்படுத்தும் சாதனம். போன நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டு பிடிப்புகளில் மிக முக்கியமானது. மனிதன் முதன் முதலில் சந்திரனில் கால் வைத்த (1969 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் தேதி) நிகழ்ச்சியை, இந்த பெட்டி அமெரிக்க மக்களின் வீடுகளுக்கு நேரடியாகக் கொண்டு சென்று பிரபலமடைந்தது. அந்த கால கட்டங்களில் இத்தகைய நிகழ்ச்சிகளை வீடுகளிலிருந்தே கண்டுகளிப்பது என்பது அதிசயமாகவும் அவசியமாகவும் இருந்தது.

தொலைக்காட்சி பெட்டியினால் நிச்சயம் நமக்கு எத்தகைய தீமையும் இல்லை. அதை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் சிக்கல் உள்ளது.

இன்றைய பல ஆய்வு முடிவுகள் தொலைக்காட்சியின் மூலம் நன்மைகளுக்குப் பதில் தீமைகளே அதிகம் என்று கூறுகிறது. முக்கியமாக ஒரு மனிதனின் கற்பனைத் திறனை அது கடுமையாகப் பாதிக்கிறது என்கிறது. கற்பனைத் திறன் இல்லாத ஒருவன் எவ்வாறு ஒரு கலைஞனாவான்? விஞ்ஞானியாவான்? புதிய கண்டுபிடிப்பை அளிப்பான்? கற்பனை இல்லாத வாழ்க்கை அடுத்த கட்டத்தை அடைவதே இல்லை.

என்னைப் பொறுத்தவரை புகை பிடிப்பது, மது அருந்துவது மற்றும் மற்ற போதைப் பழக்கங்களைப் போலவே கட்டுபாடற்ற தொலைக்காட்சி பயன்பாடும் கருதப்படவேண்டும். இது இன்று பெரும்பாலான குடும்பப் பெண்களையும், குழந்தைகளையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. குழந்தைகள் ஓடியாடி விளையாடுகிறார்களோ இல்லையோ அவர்களுக்கு தொலைக்காட்சி பெட்டியில் காட்சிகள் ஓடியாக வேண்டும்.

அலுவலகம் செல்லும் என் நண்பர்களிடம் நான் கேட்டறிந்த வரையில் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் தொலைக்காட்சியைப் பயன்படுத்துகிறார்கள். வீட்டில் இருப்பவர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து மணி நேரம் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் உடற்பயிற்ச்சிக்காக ஒரு நாளைக்கு ஒரு அரை மணி நேரம் கூட செலவழிப்பதில்லை.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து கொண்டே உணவு உண்பது என்பது இன்று பெரும்பாலான வீடுகளில் கானப்படுகிறது. இவ்வாறு செய்வதால் நமக்கு உணவின் சுவை, அளவு தெரியாமல் அதிக அளவு உண்டு விடுகிறோம். இது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். இது தான் உடல் பருமன் உள்பட பெரும்பாலான பிரச்சனைகள் தோன்றக் காரணம். மேலும் நமக்காக உணவு தயாரித்து வழங்கும் அம்மா அல்லது மனைவியை நாம் பெரும்பாலும் பாராட்ட மறந்து விடுகிறோம். அவர்களை விட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லவா நமக்கு முக்கியமாகப் போய்விட்டது.

இன்று ஒளிபரப்பில் உள்ள 95% தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கழிவுகள், அருவருப்பானவை. சேட்டிலைட் சேனல்கள் இவைகளை நமது வரவேற்பறைக்குள்ளும் படுக்கையறைக்குள்ளும் கொட்டிக் கொண்டிருக்கின்றன. குப்பை மற்றும் கழிவுகளுக்கிடையே நல்ல நிகழ்ச்சியை கண்டெடுப்பது என்பது பெரும்பாலும் இயலாமல் போய்விடுகிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதினால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வருவதில்லை என்கின்றனர். பிரச்சனைகளைத் தீர்க்குமா தொலைக்காட்சிப் பெட்டிகள்? மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை எரித்த கதைதான் என் ஞாபகத்திற்கு வருகிறது. பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒழிவதால் அவைகள் தீர்ந்து விடப் போவதில்லை. நாம் அதை தைரியமாக எதிர்கொள்ளப் பழக வேண்டும். வீடுகளில் உள்ள பிரச்சனைகளை எதிர்கொள்ள நாம் தயங்கினால் எப்படி சமுதாயத்தை எதிர்கொள்ள முடியும்?

குழந்தைகள் நம் சொல்லைக் கேட்டு வளர்வதில்லை. நம் செயல்கள், பழக்க வழக்கங்களைப் பார்த்து தான் வளர்கின்றனர். மாற்றம் நம்மில் தொடங்கி நம் குழந்தைகளின் மூலம் அடுத்த சந்ததிகளுக்குச் செல்ல வேண்டும என்பது என் ஆசை.

தொலைக்காட்சி பெட்டியே வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. எப்பொழுது எந்த நிகழ்ச்சி அவசியமோ, அப்பொழுது மட்டும், அந்த நிகழ்ச்சியை மட்டும் தான் பார்க்க வேண்டும். "வேண்டாம்" என்று நாம் சொல்லப் பழக வேண்டும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்பதால் உண்டாகும் நன்மைகள்
  • மின்சாரமும், மின்சாரத்திற்கு செலவிடப்படும் பணமும் மிச்சப்படுகிறது.
  • உங்கள் கண்களின் ஆயுள் அதிகரிக்கும்.
  • கணவன் மனைவியிடையே ஆரோக்கியமான நேரப் பங்கீடு உண்டாகும்.
  • குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோரிடம் நமது அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். அவர்களுக்கு அவசியமானதும் தேவையானதும் இதுதான்.
  • விருந்தோம்பல் வளரும்.
  • உடல் பருமன் கட்டுப்படும்.
  • குழந்தைகளின் ஆற்றலும் கற்பனையும் அதிகரிக்கும்.
  • அண்டை அயலரின் நட்பு வட்டம் பெருகும்.
  • உங்களுக்கும் ஒரு தனி லட்சியம் உண்டாகும். உங்களது பயணம் இப்பொழுது அதை நோக்கி எந்த தடைகளும் இன்றி பயணிக்கும்.
  • வெற்றியை ருசிக்கத் தொடங்குவீர்கள்.
  • மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அடுத்த தலைமுறைக்கு விளங்குவீர்கள்.

 எவ்வாறு தொலைக்காட்சி பார்ப்பதை கட்டுப்படுத்துவது?
  •  நீங்கள் தான் எதிர்கால உலகின் நம்பிக்கை. என்னால் எதுவும் முடியும் என்று நம்புங்கள்.
  • படுக்கையறையில் உள்ள தொலைக்காட்சி பெட்டியை முதலில் அகற்றிவிடவும்.
  • தொலைக்காட்சி பெட்டியின் தொலையியக்கியை (TV remote control) வங்கி பெட்டகத்தில் (bank locker) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வைத்துவிடுங்கள்.
  • நீங்கள் தற்சமயம் தொடர்ந்து பார்த்து வரும் நிகழ்ச்சியை தவிர்க்க, அவை ஒளிபரப்பாகும் நேரங்களில்
    • கோயிலுக்கோ அல்லது கடைகளுக்கோ சென்று வரலாம். ஒருவாரம் அல்லது இரண்டு வாரம் ஒரு நிகழ்ச்சியை தவிர்க்கும் போது உங்களுக்கு அதன் மேல் உள்ள ஈடுபாடு நிச்சயம் குறைந்திருக்கும்.
    • உங்களுக்கு விருப்பான துறைகளில் உள்ள நல்ல நல்ல புத்தகங்களை வாசிக்கலாம். அருகில் உள்ள நூலகங்களில் நீங்கள் உறுப்பினராகிவிடலாம்.
    • சிறந்த நடைபயிற்ச்சியோ அல்லது உடற்பயிற்ச்சியோ செய்யலாம். யோகா, தியானம் கூட முயற்ச்சிக்கலாம்.
    • உங்கள் மகன் அல்லது மகள் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரிகளுக்குச் சென்று அவர்களின் ஆசிரியர், நண்பர்களிடம் உரையாடி வரலாம். அவர்களின் திறமைகளையும் தேவைகளையும் பிரச்சனைகளையும் நேரடியாக அறியமுடியும்.
  • விடுமுறை தினங்களில் கட்டாயம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்த்து குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு விளையாடி மகிழலாம். குடும்ப உறவு வலுப்படும். முக்கிய பண்டிகை மற்றும் பொது விடுமுறையின் போது அவற்றின் அருமை பெருமைகளை நம் குழந்தைகளுக்கு அவர்களின் வயதிற்கேற்ப சொல்லிக் கொடுக்கலாம் (இதற்கு நாம் நிறைய படித்து தெரிந்து கொள்ளவது அவசியம்).
  • வசதி மற்றும் வாய்ப்பு இருப்பவர்கள் வீட்டு தோட்டம் அமைத்து பராமறித்து வரலாம். இதன் மூலம் வீட்டுச்செலவு கூட கணிசமாகக்குறையும்.
நம்மில் பலர் இரவு உணவு உண்டவுடன் உறக்கம் வரும் வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்கள் அதிகம். இதுவும் ஒரு தவறான பழக்கம். இது உடல் சோர்வை உண்டாக்கிவிடும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்பதை விட, அந்த நேரங்களை நம் திறமைக்கும் தகுதிக்கும் பொருளாதாரத்திற்கு உட்பட்டு, எவ்வாறு பயன் உள்ளதாகவும் சமுதாயத்திற்கு நன்றியுள்ளதாகவும் மாற்றுகிறோம் என்பதில்தான் நாம் அதிக கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

நாம் நமக்கான களத்தை முதலில் கண்டறிய வேண்டும். நிச்சயமாக அது தொலைக்காட்சிப் பெட்டியாக இருக்க வாய்ப்பு குறைவு.

--லிங்கேஷ்.

குறிப்பு: கடந்த ஒரு மாதமாக வாரத்திற்க்கு ஒன்று என எழுதி வருகிறேன். என் எழுத்துக்களை பற்றி உங்களின் கருத்துகளையும் மேலான அபிப்பிராயத்தையும்  தவறாமல் எனக்கு எழுதவும்.

4 comments:

ஹாய் அரும்பாவூர் said...

என்னத்தான் இருந்தாலும் தொலைக்காட்சி இப்போது நம் குடும்பதில் ஒரு நண்பனாக நுழைந்து இன்று நம்மையே ஆட்டி படைக்கும் சக்தியாக மாறா நாமும் ஒரு காரணம் .
சாப்பாடு இல்லாமல் கூட இருக்கும் பெண்கள்
ஒரு நாள் தொலைக்காட்சி இல்லை என்றால் துடித்து போவது இன்றைய கொடுமை
நல்ல பதிவு சிறப்பான ஆய்வு

Suresh said...

நல்ல கருத்துக்கள் !!

Lingesh said...

கருத்து தெரிவித்த arumbavur மற்றும் suresh அவர்களுக்கு நன்றி.

Vijayakumar .P said...

Current TN Government is running by Providing these type of freewares to people... Mr. first of all people should know their duties and rights. A Tamilan means hard worker but now it is changed to freeware searcher..Both government and people should work well otherwise we will shortly compensate with willpower...

Post a Comment