படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Thursday, October 27, 2011

இழப்பு

மண்ணெண்ணைய்
நெருப்பில் எரியும்
புது மனைவியின்
தவிப்பு....

பெற்றோரை
இழந்த
குழந்தையாய்
என் மனம்....

ஊமையின்
உணர்ச்சியை
அறியத்துடிக்கும்
குருடனின் நிலை....

ஜாதிச் சண்டையும்
கள்ள ஓட்டும்
அனுகுண்டு சோதனையும்
அரசியல் விளையாட்டும்
கார்கில் யுத்தமும்
புகைவண்டி விபத்தும்
ஒரிசா புயலும்
குஜராத் பூகம்பமும்
கலிகாலத்தின்
நிலை தான்
என்னுள்ளும்....

அன்பே
உன்னைப்
பிரிந்த போது...

குறிப்பு: இது சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் படித்தபோது எழுதியது.

Saturday, October 22, 2011

அரக்கப்பரக்க வராமலிருந்திருந்தால்?

ஓய்வெடுக்க நினைத்த போதுதான்
தெரிந்தது நின்ற இடம்
கல்லறை என்று...
அரக்கப்பரக்க வராமலிருந்திருந்தால்
அனுபவித்தாவது வாழ்ந்திருக்கலாம்...


குறிப்பு: நீண்ட நாட்களுக்குப்பின் கவிதையெழுத ஒரு சிறு முயற்சி. உங்களின் கருத்துக்களை தயவுசெய்து பின்னூட்டமிடவும்.

Friday, October 21, 2011

டீனேஜ் வயதினருக்குப் பிடிக்காத வாக்கியம் / அறிவுரை?

எவரையும் மனசுக்கு வெளியே ஒரு அடி தள்ளி வைத்துப் பழகும்போது ஏதும் பிரச்சணைகள் வருவதில்லை. அதேசமயம் அவரை மனதிற்குள் வைக்கும் போதுதான் எல்லா பிரச்சணைகளும் வருகின்றன. யாரை மனதிற்குள் வைப்பது, யாரை வெளியே வைப்பது என்றும் தெளிவாக இருங்கள்.

ஆண்களைப் பொறுத்தவரை காதலி மிகவும் புத்திசாலியாகவும் மனைவி முட்டாளாகவும் இருக்க விரும்புவர்.

டீனேஜ் வயதினருக்குப் பிடிக்காத வாக்கியம் / அறிவுரை - "பருவத்தில் பன்னி குட்டி கூட அழகாக இருக்கும்". என் பதின்ம வயதில் எனக்கு சொல்லப்பட்ட அறிவுரை.

அப்பெண் என்னை காதலிப்பதாக என் தோழி மூலம் அறிய நேர்ந்தது. பல வருடங்களாக நல்ல நண்பராகத்தான் அப்பெண் எனக்கு இருந்துள்ளார். பல காரணங்களால் என்னால் அக்காதலை ஏற்ற முடியவில்லை என்று கூறிய பின் என்னுடன் பேசுவதை முற்றிலும் தவிர்த்துவிட்டார். நானும் கட்டாயப்படுத்தவில்லை. நட்புக்கு அடுத்த நிலைதானே காதல். அக்காதல் கைகூடாதபோது நட்பை ஏன் தொடர முடிவதில்லை?

இந்தியா ஊழல் நாடு லஞ்சத்தை ஒழிக்கவேண்டும் என்று முழங்கும் நாம், நம் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் வாங்கும் போது தரும் கையூட்டை வசதியாய் மறந்துவிடுகிறோம். ஏன்?

Tuesday, October 18, 2011

பண்டிகைகள் அதன் சுயத்தை இழந்துவிட்டதா?

எப்பொழுது தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை நிறுத்தினேன் என்று தெரியவில்லை. சிறு வயதுகளில் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னமே அட்டவணை தயாரித்து அப்பாவின் சம்பளம் அல்லது போனஸ் பணம் வந்தவுடன் பட்டாசுகளை வாங்கி வந்து தங்கையுடன் சண்டையிட்டு பங்கு பிரித்து கொண்டு அதை தினமும் எடுத்துப் பார்த்துக்கொண்டு தீபாவளி வரும் நாளுக்காக ஏங்கிக்கொண்டிருந்த காலங்கள் இப்பொழுது இல்லை. அத்தனை ஆர்வங்களும் சட்டென மறைந்து விட்டது. எத்தகைய அபாயகரமாண வெடியையும் கையில் பிடித்துவெடித்த லாவகம் இப்பொழுது மற்றவர்கள் வெடிப்பதை பார்ப்பதே கொஞ்சம் பயமாகவும் மாறிவிட்டது. முன்பெல்லாம் பண்டிகைக்கு அடுத்தநாள் கூட்டி ஒதுக்கிவைத்திருக்கும் பட்டாசு குப்பைகளின் குவியலைப்பார்க்கும் போது ஏற்பட்ட ஒருவித கர்வம், சந்தோஷம் இப்பொழுது எரிச்சலாக மாறிவிட்டது. எதற்கு கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கரியாக்க வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்குகிறது. பட்டாசு வெடிப்பதற்குப்பதில் ஒரு தீபத்தை ஏற்றி வழிபடலாம். சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் கேடு பெருமளவு குறையும்.

தற்பொழுது அனைத்து பண்டிகைகளும் கமர்ஷியல் எனப்படும் வணிக மாய வலைக்குள் சிக்கி அதன் சுயத்தை இழந்துவிட்டது என்பது என் தனிப்பட்ட கருத்து. அதனாலேயே பண்டிகையின் மேல் இயல்பாய் ஏற்படக்கூடிய ஈர்ப்பு வராமலேயே போய்விட்டது.

முன்பெல்லாம் காலையில் குளித்து முடித்தவுடன் அம்மா ஒரு கட்டு லட்சுமி வெடியை கொடுத்து சாங்கியத்திற்காகவாவது வெடி என்று கூறுவார்கள். இப்பொழுதெல்லாம் அந்த வற்புறுத்துதல் கூட குறைந்து விட்டது.

பண்டிகையின் மேல் நமது தொலைக்காட்சிகளுக்கு இருக்கும் பொறுப்பும் அக்கறையும் நம்மை புல்லரிக்க வைக்கின்றது. ஒரு பட்டிமன்றம், இரண்டு திரைப்படம், கலைக் கூத்தாடிகளின் பேட்டி என்று இவர்கள் சம்மந்தப்படுத்தும் விசயங்கள் அந்த பண்டிகையின் பெருமைக்கு எவ்விதத்திலும் துணைபுரியப் போவதில்லை.

உறவினர்களின் வருகை கூட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் குறைந்து விட்டது. பிறகெப்படி அடுத்த தலைமுறைக்கு நாம் இந்த பண்டிகையின் அருமை பெருமை மற்றும் வரலாற்றை கொண்டு போகப்போகிறோம்.

Friday, October 14, 2011

திருமண உறவில் இருந்து பிரிந்து செல்வது தற்கொலைக்குச் சமமானதா?

கல்லூரியில் என்னுடன் படித்த நண்பனை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவனது இல்லத்தில் சில நாட்களுக்கு முன் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த நான்கு ஆண்டுகளில் அவன் சென்னையில் ஒரு சொந்த வீடு வாங்கிவிட்டான். திருமணமும் முடிந்து ஒரு குழந்தையுடன் வாழ்க்கை சந்தோஷமுடன் செல்வதையறிந்து மட்டற்ற மகிழ்ச்சி.

நீண்ட நேரம் அவனுடன் உரையாடியதில் கீழ்க்கண்ட விசயங்கள் பெரும்பாலானவர்களுக்கும் பொருந்தும் என்பதால் இங்கே பகிர்ந்துள்ளேன். இது நண்பனின் வாழ்க்கையை பற்றியது அல்ல. பொதுவானது.

கணவன் அல்லது மனைவி இருவரும் தன் துணையின் மேல் ஆளுமை / ஆதிக்கம் செலுத்துவதைவிட்டு அன்பு செலுத்தவேண்டும். ஆளுமை / ஆதிக்கம் ஒரு போதை.

சூழ்நிலைக்கு ஏற்ப குடும்ப பொறுப்புக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் பொறுப்புக்களை உணர்ந்து உடனுக்குடன் நிறைவேற்றுங்கள்.

துணையின் இயலாமையை விமர்சனம் செய்யாதீர்கள். புரிந்துகொள்ளுங்கள்.

நாம் மற்ற விசயங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை தன் துணையின் சிறு சிறு உணர்வுகளுக்கும் தரவேண்டும். சிறு விரிசல்கள் தான் ஒரு நாள் மொத்தத்தையும் தகர்த்துவிடும்.

எப்போதும் நாம் நம் துணைக்கு மருந்தாக இருக்கவேண்டுமே தவிர ஒரு போதும் பிணியாக மாறக்கூடாது.

அல்ப காரணங்களுக்காக திருமண உறவில் இருந்து பிரிந்து செல்வது தற்கொலைக்குச் சமமானது.

கணவன் அல்லது மனைவி இருவரும் ஒரு குடும்ப எல்லையை வகுத்துக்கொண்டு அதற்குள் மற்ற உறவுகளின் ஆதிக்கத்தை முற்றிலும் தவிர்த்துவிடவேண்டும்.

பேசுங்கள். மனது விட்டு அன்புடன் பேசுங்கள். ஒரு துணை பேச ஏங்கும்போது தவறாமல் பேசுங்கள். நீங்கள் பேசும் விசயம் உங்களின் துணையை காயப்படுத்தும் என்றால் தயவுசெய்து தவிர்த்துவிடுங்கள். நிச்சயம் நீங்கள் பேச விரும்பிய விசயத்தை உங்களின் துணையை காயப்படுத்தாமல் சொல்லமுடியும். கற்றுக்கொள்ளுங்கள்.

எப்போதும் எக்காலத்துக்திலும் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஒருவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. அப்படி ஒரு நிலை திருமண வாழ்வில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களின் குழந்தைகளின் முன்பு தயவுசெய்து சண்டையிட்டுக்கெள்ளாதீர்கள். மேலும் ஒருவர் மற்றவரின் மேல் உள்ள குற்றம் குறைகளை குழந்தைகளிடம் கூறிக்கொண்டிருக்காதீர்கள். குழந்தைகளுக்கு ஒரு உதாரணமாக நடந்து கொள்ளுங்கள்.

உறவுகள் மற்றும் நண்பர்களில் உள்ள கறுப்பு ஆடுகளை அடையாளம் கண்டுகொள்ளவும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

குறிப்பு 1: இங்கு நான் துணை (துணைவி அல்ல) என்று எழுதியிருப்பது ஆண் மற்றும் பெண் இருவரையும் பொதுவாக குறிப்பிடவே.

குறிப்பு 2: இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். வாய்ப்பிருந்தால் உங்களின் கருத்துக்களுக்குப் பிறகு அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.

உங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் என் எழுத்துக்களுக்கு உரம்.

Thursday, October 13, 2011

ஒரு சிறிய நினைவுகூறல் - 2

1996 ஆம் ஆண்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெரும் பள்ளியில், பள்ளிக்குச் சொந்தமான விடுதியில் தங்கி பள்ளி இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தேன். அது ஒரு கண்டிப்பான விடுதி மற்றும் காப்பாளர்களைக் கொண்டது. பள்ளி முடிந்த பின் தனி வகுப்புகளுக்குச் செல்ல மாலை ஆறு மணிவரை அனுமதியுண்டு. தேர்வுகள் அல்லாத சமயங்களில் சனிக்கிழமை முதல் காட்சி திரைப்படத்திற்கு சென்று வர அனுமதியுண்டு.

ஒரு முறை எனக்கு சிறிது உடல்நலம் சரியிலை. மருத்துவரிடம் சென்று வரவேண்டும் என்று விடுதி காப்பாளரிடம் (மிகவும் கண்டிப்பானவர்) சிறப்பு அனுமதிபெற்று (வயிறு வலிக்கிறது என்று சொல்லி) மாலை ஏழு மணிக்குமேல் வைத்தியரிடம் சென்றேன். துணைக்கு என் அறை நண்பர் ஒருவரும் வந்தார். நாங்கள் சென்றது தெரிந்த ஒரு சித்த மருத்துவரிடம். காலையில் சரியாகிவிடும் என்று சொல்லி அவரிடம் இருந்த மருந்தை சுடுநீரில் கலந்து பருகச்சொன்னார்.

விடுதிக்குத் திரும்பும் வழியில் சரவணா ஹோட்டல் கண்ணில் படவே நண்பனுடன் சென்று கொத்து பரோட்டா இரண்டு சொல்லிவிட்டு ஒரு மேஜையில் வந்து அமர்ந்தோம். நாங்கள் ஏதோ பேசிக் கொண்டே அருகில் அமர்ந்திருந்தவரை கண்டவுடன் இருவரின் முகமும் வெளிரிவிட்டது. அவர் எங்களின் விடுதிக் காப்பாளர். அதற்குள் கொத்து பரோட்டா வந்துவிடவே எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. (வயிற்று வலி என்று சொல்லித்தான் விடுதியை விட்டு வெளியே வந்தோம். மேலும் விடுதியில் தங்கிவிட்டு வெளியில் சாப்பிட அனுமதியில்லை). நாங்கள் முழிப்பதைப்பார்த்த அவர் சாப்பிடுங்கள் என்று சொன்னார். வாழ்க்கையில் அவ்வளவு விரைவாக கொத்து பரோட்டாவை நான் சாப்பிட்டதில்லை. விரைவில் விடுத்திக்கு வந்து படுத்துவிட்டேன்.

சிறிது நேரத்தில் என்னை அழைத்த காப்பாளர் பார்த்தாரே ஒரு பார்வை, இன்றைக்கும் மறக்க முடியவில்லை. பிறகு அடுத்த நாள் அந்த சித்த மருத்துவரை விடுதிக்கு அழைத்துவந்து காப்பாளரிடம் பேசவைத்த பிறகே அவருக்கு எங்கள் மேல் நம்பிக்கை வந்தது. வயிற்று வலியும் கொத்து பரோட்டாவும் அடிக்கடி இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்துகிறது.

குறிப்பு: எங்களிடம் கண்டிப்பு காட்டிய அந்த காப்பாளர் மட்டும் ஏன் விடுதியில் சாப்பிடாமல் அந்த ஹோட்டலில் சாப்பிடவேண்டும். யார் அவரை கண்டிப்பது?