படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.
Showing posts with label கொத்து பரோட்டா. Show all posts
Showing posts with label கொத்து பரோட்டா. Show all posts

Thursday, October 13, 2011

ஒரு சிறிய நினைவுகூறல் - 2

1996 ஆம் ஆண்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெரும் பள்ளியில், பள்ளிக்குச் சொந்தமான விடுதியில் தங்கி பள்ளி இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தேன். அது ஒரு கண்டிப்பான விடுதி மற்றும் காப்பாளர்களைக் கொண்டது. பள்ளி முடிந்த பின் தனி வகுப்புகளுக்குச் செல்ல மாலை ஆறு மணிவரை அனுமதியுண்டு. தேர்வுகள் அல்லாத சமயங்களில் சனிக்கிழமை முதல் காட்சி திரைப்படத்திற்கு சென்று வர அனுமதியுண்டு.

ஒரு முறை எனக்கு சிறிது உடல்நலம் சரியிலை. மருத்துவரிடம் சென்று வரவேண்டும் என்று விடுதி காப்பாளரிடம் (மிகவும் கண்டிப்பானவர்) சிறப்பு அனுமதிபெற்று (வயிறு வலிக்கிறது என்று சொல்லி) மாலை ஏழு மணிக்குமேல் வைத்தியரிடம் சென்றேன். துணைக்கு என் அறை நண்பர் ஒருவரும் வந்தார். நாங்கள் சென்றது தெரிந்த ஒரு சித்த மருத்துவரிடம். காலையில் சரியாகிவிடும் என்று சொல்லி அவரிடம் இருந்த மருந்தை சுடுநீரில் கலந்து பருகச்சொன்னார்.

விடுதிக்குத் திரும்பும் வழியில் சரவணா ஹோட்டல் கண்ணில் படவே நண்பனுடன் சென்று கொத்து பரோட்டா இரண்டு சொல்லிவிட்டு ஒரு மேஜையில் வந்து அமர்ந்தோம். நாங்கள் ஏதோ பேசிக் கொண்டே அருகில் அமர்ந்திருந்தவரை கண்டவுடன் இருவரின் முகமும் வெளிரிவிட்டது. அவர் எங்களின் விடுதிக் காப்பாளர். அதற்குள் கொத்து பரோட்டா வந்துவிடவே எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. (வயிற்று வலி என்று சொல்லித்தான் விடுதியை விட்டு வெளியே வந்தோம். மேலும் விடுதியில் தங்கிவிட்டு வெளியில் சாப்பிட அனுமதியில்லை). நாங்கள் முழிப்பதைப்பார்த்த அவர் சாப்பிடுங்கள் என்று சொன்னார். வாழ்க்கையில் அவ்வளவு விரைவாக கொத்து பரோட்டாவை நான் சாப்பிட்டதில்லை. விரைவில் விடுத்திக்கு வந்து படுத்துவிட்டேன்.

சிறிது நேரத்தில் என்னை அழைத்த காப்பாளர் பார்த்தாரே ஒரு பார்வை, இன்றைக்கும் மறக்க முடியவில்லை. பிறகு அடுத்த நாள் அந்த சித்த மருத்துவரை விடுதிக்கு அழைத்துவந்து காப்பாளரிடம் பேசவைத்த பிறகே அவருக்கு எங்கள் மேல் நம்பிக்கை வந்தது. வயிற்று வலியும் கொத்து பரோட்டாவும் அடிக்கடி இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்துகிறது.

குறிப்பு: எங்களிடம் கண்டிப்பு காட்டிய அந்த காப்பாளர் மட்டும் ஏன் விடுதியில் சாப்பிடாமல் அந்த ஹோட்டலில் சாப்பிடவேண்டும். யார் அவரை கண்டிப்பது?