படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.
Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Wednesday, May 23, 2012

வழக்கு எண் - என் பார்வையில்




தண்டிப்பதும் தண்டிக்கப்படுவதும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலோட்டமாகப் பார்த்தால் இது கொஞ்சம் சிறு பிள்ளைத்தனமாகத் தோன்றலாம்.

ஒரு சிறு ஒப்பீடு... புரிவதற்காக

நீங்கள் ஒரு பொது இடத்தில் எச்சில் துப்புகிறீர்கள். அதற்காக உங்கள் நாக்கை வெட்டி எறிய வேண்டும் என்ற தண்டனையை ஏற்றுக்கொள்வீர்களா.

ஒரு பரம ஏழை ஒரு மிகக்பெரிய பணக்காரன். இருவரும் ஒரே தவறைச் செய்கிறார்கள். அபராதம் என்ற தண்டனை யாருக்கு சாதகமாகவும் பாதகமாகவும் முடியும் என்று கருதுகிறீர்கள்.

நீங்கள் நடந்து செல்கிறீர்கள். ஒரு கல்லில் தெரியாமல் இடித்துக்கொள்கிறீர்கள். இரத்தம் கொட்டுகிறது. கல்லுக்கா தண்டனை தரமுடியும் இல்லை உங்கள் காலுக்கா தண்டனை தருவது.

நீங்கள் ஒருவரைக் காதலித்தீர்கள். அவரும் உங்களைக் காதலித்தார். அங்கு காதல் இருந்தது, அன்பு இருந்தது, பாசம் இருந்தது, அக்கறை இருந்தது, பாதுகாப்பு இருந்தது, ஒரு உயர்ந்த உறவு இருந்தது. பிரிந்து விட்டீர்கள். தண்டனை தருவதால் காதல், அன்பு, பாசம், அக்கறை, பாதுகாப்பு திரும்ப வந்துவிடவா போகிறது.

அடக்கு முறையால் ஒழுக்கம் வராது. உங்களின் மனம் கூட பல சமயம் உங்கள் புத்தியின் சொல்படி நடப்பதில்லை.

எந்த உயிரின் மீதும் தண்டனை என்று கூறி மனதை கீரிப் பார்க்காதீர்கள். உடலை ரணப்படுத்தாதீர்கள்.

உங்களது வேலையைச் சரியாக, மிகச் சரியாக செய்யுங்கள். அதுவே போதும். உலகம் ஆனந்தமாகிவிடும்.

Wednesday, December 28, 2011

மலரும் நினைவுகள் - 3 (மறக்கத்தான் முடியுமா)


மறக்கத்தான் முடியுமா?


மறக்கத்தான் முடியுமா?
காய்ந்த பேருந்து நிறுத்தத்தில்
நீ மட்டும் பசுமையாய்
நின்ற காலங்களை...

மறக்கத்தான் முடியுமா?
கல்லூரிக்குள் கால்வைத்த
முதல் நாள் முகவரிகளை...

மறக்கத்தான் முடியுமா?
நாம் முதன் முதலில்
பார்த்த திரைப்படத்தை...

மறக்கத்தான் முடியுமா?
நம்மை இணைத்து மற்றவர்கள்
பேசிய வார்த்தைகளை...

மறக்கத்தான் முடியுமா?
உன் திருமணத்தில்
மாப்பிளை தோழனாக
நான் நின்றதை....

அன்பே
நம் நினைவுகளை மட்டுமே
என்னால் மறக்க முடியவில்லை!
உன்னையல்ல...

Monday, November 7, 2011

ஒரு சிறிய நினைவுகூறல் - 3

சில வருடங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் கணக்கு தொடங்கியவுடன், எங்கள் பள்ளியின் பெயரைக் கொண்டு தேடியதில், கிடைத்த அந்த நண்பரின் புகைப்படத்தினை கண்டவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பேஸ்புக்கின் உதவியால் சில நிமிடங்களில் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். எங்களது பேச்சு சில மணிகள் கடந்தும் தொடர்ந்தது. பல தொடர்புகள் தொலைந்து போன நண்பர்களின் மீள் அறிமுகம் கிடைத்தது. நீண்ட நேரம் அவர் நினைவாகவே இருந்தது.

சிறு கடந்த கால அறிமுகம்: பள்ளியில் என்னுடன் விடுதியில் தங்கிப்படித்த அந்த நண்பர் இறுதித்தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியுற்றார். நாங்கள் படிக்கும் காலத்தில் நல்ல நண்பர்களாக இருந்துள்ளோம் ஆனால் கடிதம் தவிர ஏனைய தகவல்தொடர்புகள் பிரபலமாகாத காலம் அது என்பதால் பள்ளி இறுதி வகுப்பிற்குப் பின் அவருடன் தொடர்புகொள்ள இயலாமல் போய்விட்டது. அவர் பெற்ற தோல்வியும், மற்றவரிடம் தொடர்பு கொள்ள இயலாத மனநிலையை அவருக்கு ஏற்றபடுத்தி விட்டது. அந்த காலகட்டத்தில் அவருக்கு ஏற்பட்ட அவமானங்கள் ஏராளம்.

அதன்பிறகு மனம் தளராமல் அடுத்த ஆண்டு அந்த பாடத்தில் தேர்ச்சி பெற்று, இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளையும் முடித்து விட்டார். தற்சமயம் திருமணம் முடித்து அமெரிக்காவில் அவர் துறைசார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இன்று அவர் வாழ்க்கையில் வெற்றி பெற்றாலும் பட்ட அவமானங்களும் வேதனைகளும் இன்றும் அவரின் நினைவில் உள்ளது.

தேர்வில் தோல்வியடைவதை, வாழ்வில் தோல்வியடைவதைப்போல் ஏன் சமுதாயம் சித்தரிக்கவேண்டும். இதன் உச்சகட்டம் தான் நிறைய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது. சமீப காலங்களில் இத்தகைய தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒருவன் தேர்வில் தோல்வியடையும் போது இச்சமுதாயமும், பெற்றோர் மற்றும் நண்பர்கள் மிகவும் பொறுப்புடன் இருக்க வேண்டும். பாடத்தில் தோல்வி என்பது வாழ்க்கையின் தோல்வி அல்ல. வாழ்க்கையில் சிறு தடைதான். அதிலிருந்து அவன் மீள்வதற்குரிய சூழ்நிலையை நாம் உருவாக்கித் தர வேண்டுமே தவிர அவனை குற்ற உணர்ச்சியில் தவிக்க விடக்கூடாது.

பள்ளித் தேர்வுத் தோல்வியை ஏளனமாக்குபவர்களுக்கு என் நண்பனின் வாழ்க்கை ஒரு பாடமாக இருக்கும் என்ற எண்ணத்தில் இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.