படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Wednesday, May 23, 2012

வழக்கு எண் - என் பார்வையில்




தண்டிப்பதும் தண்டிக்கப்படுவதும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலோட்டமாகப் பார்த்தால் இது கொஞ்சம் சிறு பிள்ளைத்தனமாகத் தோன்றலாம்.

ஒரு சிறு ஒப்பீடு... புரிவதற்காக

நீங்கள் ஒரு பொது இடத்தில் எச்சில் துப்புகிறீர்கள். அதற்காக உங்கள் நாக்கை வெட்டி எறிய வேண்டும் என்ற தண்டனையை ஏற்றுக்கொள்வீர்களா.

ஒரு பரம ஏழை ஒரு மிகக்பெரிய பணக்காரன். இருவரும் ஒரே தவறைச் செய்கிறார்கள். அபராதம் என்ற தண்டனை யாருக்கு சாதகமாகவும் பாதகமாகவும் முடியும் என்று கருதுகிறீர்கள்.

நீங்கள் நடந்து செல்கிறீர்கள். ஒரு கல்லில் தெரியாமல் இடித்துக்கொள்கிறீர்கள். இரத்தம் கொட்டுகிறது. கல்லுக்கா தண்டனை தரமுடியும் இல்லை உங்கள் காலுக்கா தண்டனை தருவது.

நீங்கள் ஒருவரைக் காதலித்தீர்கள். அவரும் உங்களைக் காதலித்தார். அங்கு காதல் இருந்தது, அன்பு இருந்தது, பாசம் இருந்தது, அக்கறை இருந்தது, பாதுகாப்பு இருந்தது, ஒரு உயர்ந்த உறவு இருந்தது. பிரிந்து விட்டீர்கள். தண்டனை தருவதால் காதல், அன்பு, பாசம், அக்கறை, பாதுகாப்பு திரும்ப வந்துவிடவா போகிறது.

அடக்கு முறையால் ஒழுக்கம் வராது. உங்களின் மனம் கூட பல சமயம் உங்கள் புத்தியின் சொல்படி நடப்பதில்லை.

எந்த உயிரின் மீதும் தண்டனை என்று கூறி மனதை கீரிப் பார்க்காதீர்கள். உடலை ரணப்படுத்தாதீர்கள்.

உங்களது வேலையைச் சரியாக, மிகச் சரியாக செய்யுங்கள். அதுவே போதும். உலகம் ஆனந்தமாகிவிடும்.

Wednesday, April 11, 2012

என் நம்பிக்கை!



மறந்து போக
இது ஒன்றும்
நினைவு அல்ல...
என் நம்பிக்கை!

சட்டென்று உடைய
இது ஒன்றும்
கண்ணாடி பொம்மையில்லை...
என் காதல்!

முடிந்து போக
இது ஒன்றும்
திரைப்படம் இல்லை...
என் வாழ்க்கை!

Thursday, March 8, 2012

முதல் காதல்



என்னங்க இந்தப் பெட்டியை கொஞ்சம் கீழே இறக்கிக் கொடுங்கள் என்று என் மனைவி என்னை அழைக்க படித்துக் கொண்டிருந்த நாவலை மேஐை மீது வைத்து விட்டு படுக்கை அறைக்குள் நுழைந்தேன்.

தயாராக ஒரு டேபிளை நகர்த்தி வைத்திருந்தாள். நான் அடுத்து என்ன கேட்பேன் என்பது இந்த இருபத்தி நான்கு வருட தாம்பத்திய வாழ்க்கையில் சரியாக புரிந்து வைத்துள்ளவள்.

எங்களுக்கு மகள் பிறந்தவுடன் அவள் உடுத்திய முதல் உடை, துண்டு, ஸ்வட்டர், செருப்பு, சூ, வலையல்கள், கொலுசு, விளையாட்டுப் பொருட்கள் என்று சகலமும் அந்தப் பெட்டியில் தான் இருந்தது. அதை ஒரு பொக்கிஷமாகவே பாதுகாத்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த வாரம் எங்களது ஒரே மகள் அருகில் உள்ள நகரத்துக் கல்லூரியில் மேற்படிப்புக்காக விடுதியில் தங்கிப் படிக்கப் போகிறாள். அதற்காக என் மனைவி படுக்கை அறையில் ஒரு ஷோகேஷ் செய்து அதில் நாங்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கும் பொருட்களையும் புகைப்படங்களையும் காட்சிப்படுத்தும் எண்ணம். அதற்காகத்தான் இன்று அந்தப் பெட்டியை எடுக்கச்சொல்கிறாள்.

நானும்தான் அவள் என்னை நிராகரித்த போதும் அவள் நினைவாக என்னிடமிருந்த அவள் நினைவுகளைப் பொக்கிஷமாகவே பாதுகாத்துக் கொண்டிருந்தேன். அவள் கைக்குட்டைகள், நெற்றிப்பொட்டு, அவளும் நானும் சேர்ந்து பயனித்த பேருந்துச் சீட்டு, திரையரங்க அனுமதிச் சீட்டு, உதிர்ந்த முடி, புகைப்படங்கள், வாழ்த்து அட்டைகள், கடிதங்கள், வலையல்கள் என்று ஏகப்பட்டது.

எப்பொழுது எனக்கு அவள் மேல் காதல் வந்தது என்று தெரியவில்லை. பேரழகி என்று சொல்ல முடியாது ஆனால் பார்த்தவுடன் உண்டாகும் இன்பத்திற்காகவே பார்த்துக் கொண்டேயிருப்பேன். பாவாடை சட்டையில் ஒற்றைப் புத்தகப்பையுடன் இரட்டை ஜடை போட்டு அவள் திமிர் நடையுடன் வருவது இன்றும் என் கண்ணுக்குள் அப்படியே இருக்கிறது. அவளிடம் எனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டால் திரு திருவென்று விழிப்பேன். ஏனென்றால் அவள் என்ன செய்தாலும் எனக்கு அது பிடித்ததாகவே இருந்தது. ஒரு முறை ஆசிரியரின் கேள்விக்கு நான் தவறாக பதில் அளிக்க தண்டனையாக என் உச்சி மண்டையில் நங்கென்று ஒரு கொட்டுவிட்டார். என் கண்ணிலும் அவள் கண்ணிலும் கண்ணீர் எங்களது காதலுடன் எட்டிப்பார்த்தது. பள்ளியில் தோன்றிய காதல் பின்பு கல்லூரியிலும் தொடர்ந்தது.

பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்ததைக் கூடத் தவிர்த்து அவளுக்காக அவளுடன் படிக்க வேண்டும் என்று கலைக் கல்லூரியில் சேர்ந்தேன். அவனவன் நம்மிடம் ஒரு பெண் பேசமாட்டாளா என்று ஏங்கியபோது எனக்கு எங்களது காதல் பெருமையாகத் தெரிந்தது. பெருமைக்கு எருமை மேய்க்கக் கூடாது என்று கிராமத்தில் ஒரு வழக்குச் சொல் உள்ளது. பள்ளியில் பெரிதாகத் தெரியாத அவளின் பல குணங்கள் கல்லூரியில் தெரியத் தொடங்கியது. அவளின் எண்ணங்களை என் மேல் திணிக்கத் தொடங்கியதை மெல்ல மெல்ல உணரத் தொடங்கினேன். இருந்தும் அவள் மேல் உள்ள அன்பால் காதலால் அவைகள் எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை.

இளங்கலை படிப்பு முடித்தவுடன் வாழ்க்கை நடத்த ஒரு வேலை வேண்டும் என்று அவள் சொன்னதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு முதுகலை படிக்கும் கனவை ஒத்தி வைத்து வடஇந்தியாவில் ஒரு வேலையைத் தேடிக்கொண்டேன். எங்களது காதல் தொலைபேசியிலும், கடிதங்களிலும் வருடத்திற்கு ஒரு முறை கிடைக்கும் விடுமுறையிலும் தொடர்ந்தது. எங்களுடன் இளங்கலை படித்த நண்பர்கள் சிலர் அவளுடன் முதுகலை படித்து வந்தனர். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு நண்பர்களின் வற்புறுத்தலால் தொலைதூரக் கல்வியில் முதுகலைப் படிப்பில் சேர்ந்தேன். நான் பார்த்து வந்த வேலையில் பெரிய சம்பளம் என்று ஒன்றும் கிடையாது. தங்க, சாப்பிட, தொலைபேசியில் அவளுடன் பேசுவதற்கே பற்றாக் குறையாகவே இருந்தது. படிப்புக்கு தேவைப்பட்ட பணத்திற்கு சிறு சிறு வேலைகளைச் செய்யத் தொடங்கியபோது அவளுடன் பேசும் நேரம் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது. அது மட்டுமல்லாமல் எங்களுக்குள் எங்களுக்கே தெரியாமல் ஒரு இடைவெளி உருவாகத் தொடங்கியது.

சிறு சிறு ஈகோ மோதல்கள் அவ்வப்போது வருவதும் போவதும் உண்டு. அப்போதெல்லாம் என்னால் என் வேலையிலும் படிப்பிலும் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பேன். நண்பர்கள் தான் ஆறுதல் சொல்லி சகஜ நிலைக்குக் கொண்டுவருவார்கள். எங்களது கதை தெரிந்த அலுவலகத் தோழியும் ஆறுதலாக இருந்தாள்.

கல்லூரி விடுமுறையில் என்னைப் பார்க்கவும் வட இந்தியாவை சுத்திப்பர்க்கவும் வந்த நண்பர்களில் ஒருவன் என் புகைப்பட ஆல்பத்தில் அலுவலகத் தோழியுடன் நட்பாக எடுத்துக்கொண்ட ஒரு புகைப்பத்தினை எனக்குத் தெரியால் எடுத்துச் சென்று என் காதலியிடம் காட்டிவிட்டான். என்னைத் தொடர்பு கொண்டவள் எனக்கும் என் தோழிக்கும் தவறான உறவு இருப்பது போல் பேச எங்களுக்குள் பெரிய சண்டையாகிவிட்டது. வார்த்தைகளும் தடித்துவிட்டன்.

உன்னிடம் பேசுவதைவிட என் தோழியிடம் பேசும் போது ஆறுதலாக உள்ளது. உன்னிடம் பேசும் ஒவ்வொரு முறையும் எனக்கு மிகப்பெரிய அசெளகரியம் உண்டாகிறது. பேசும் போதும் பேசிய பின்பும் அது நமக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும். ஆனந்தத்தைத் தூண்டவேண்டும். ஆனால் உன்னிடம் பேசும் போதும் பேசிய பின்பும் எனக்கு உன் மேல் உள்ள வெறுப்பு அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. வெறுப்பு அதிகரிக்க அதிகரிக்க காதலும் தள்ளி நின்று எள்ளி நகையாடுகிறது.

ஆம் தவிர்த்து விடுவது தான் தீர்வு. சாக்கடை நீரைப் பருகினால் நோய் உண்டாகும் என்றால் அதை தவிர்த்து விடுவதுதான் நம் உடலுக்கு நன்று. அதைப் போலத்தான் காதலிலும் சில விசயங்களைத் தவிர்த்துவிடவேண்டும்.

இயல்பிலேயே நமக்குள் ஒத்துவரவில்லை. பிரிந்து விடுவதுதான் நமக்கும் நம் எதிர் காலத்திற்கும் நல்லது.

அதன் பின்பு எங்களுக்குள் உள்ள தொடர்பு முற்றிலும் அற்று விட்டது.

என் நண்பர்கள் அந்த இடியை என் தலையில் இறக்கினார்கள். அவளுக்கு திருமணம் செய்ய மாப்பிளை பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்று. சொன்ன செய்தியை அவளுடன் உறுதி செய்து கொள்ள நான் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. அவளைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. என்னைத் தவிர்த்துவிட்டாள் என்று பிறகு அறிந்துகொண்டேன்.

உடனடியாக விடுப்பு எடுத்துக்கொண்டு அவளைப்பார்க்க அவள் படிக்கும் கல்லூரிக்குச் சென்றேன். அவள் பெற்றோர் அவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும் அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துவிட்டு என் பதிலுக்குக் கூட காத்திராமல் நகரத் தொடங்கினாள்.

காதலுக்கும் வாழ்க்கைக்கும் நம்பிக்கை மிக மிக முக்கியம். அதுதான் ஆதாரமும் கூட. என்றைக்கு உனக்கு என் மேல் சந்தேகம் வந்து விட்டதோ, அன்றைக்கே நம் காதலும் செத்துவிட்டது. இதையும் மீறி நாம் வாழ்கையில் சேர்ந்தாலும் நிச்சயம் அது நரக வேதனையையே தரும். இதுதான் நான் அவளிடம் கடைசியாக பேசிய வாக்கியம்.

பின்பு என் நண்பர்களும் எனக்காக அவளிடம் பேச முயன்று அவமானப்பட்டார்கள். ஆண்டுகள் பல கடந்துவிட்டன, காட்சிகள் பெருமளவு மாறிவிட்டது.

போன் எவ்வளவு நேரம் அடிக்குது அங்க உக்கார்ந்து என்ன யோசனை என்று கேட்டவாறே தொலைபேசியை எடுத்து பேசி வைத்துவிட்டு, என்ன ஒரு மாதிரியா இருக்கீங்க தலை வலிக்கிறதா, காபி தரட்டுமா என்றவளிடம் வேண்டாம் எனவும் சமையலறைக்குள் சென்றுவிட்டாள்.

மீண்டும் அவள் என்னைத் தொடர்பு கொள்வாள் என்று நான் கனவிலும் நினைக்க வில்லை. என்னை சமுதாயத்தில் நிலை நிறுத்த போராடிக் கொண்டிருந்த காலகட்டம். நல்ல நண்பர்களின் உறுதுணையால் ஒரு நல்ல வேலையில் அமர்ந்திருந்த நேரம் அது. வாழ்கையில் கொஞ்சம் அனுபவத்தையும் மெச்சூரிட்டியையும் பெற்றிருந்தேன். எது தேவை எது தேவையில்லை என்று தீர்மானிக்கும் தெளிவான மனநிலை அப்போது இருந்தது என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனாலும் அவளின் குரல் கேட்ட அந்த நொடி... இப்பொழுது நினைத்தாலும் என் இதயத்துடிப்பு எகிறத்தான் செய்கிறது. ஆம் நான் தான் பேசுகிறேன் என்றதும் மறுமுனையில் நீண்ட அமைதி. நான் அந்த அமைதியை உடைக்க விரும்பாமல் அமைதியாகக் காத்திருந்தேன். நான் உன்னைப் பார்க்கனும். உன்னிடம் மனம்விட்டு பேசவேண்டும் என்றவளை மேற்கொண்டு பேசவிடாமல் எதற்கு என்றேன். பிளீஸ் என்ற கெஞ்சல் என்னை கட்டிப்போட்டது. சரி. அடுத்தவாரம் சந்திக்கலாம் என்று அவள் கூறிய இடத்தை கேட்டுக்கொண்டு தொலைபேசியின் தொடர்பைத் துண்டித்தேன்.

அப்போது என் பெற்றோர்களின் ஆதரவும் என்க்குப் பெரியதாக இல்லை. அவளைப் பிரிந்த பின் எல்லாமே எனக்கு என் நண்பர்கள்தான். அவர்கள் மட்டும் என்னுடன் இல்லையென்றால் நான் இன்று உயிருடனே இருந்திருக்க வாய்ப்பில்லை. அவள் எனக்கு இல்லை என்று தெரிந்ததும் என் மனது அதை ஒத்துக்கொள்ளவே இல்லை. எனக்குள் ஒரு சாத்தான் குடிபுகுந்த உணர்வு. என் உடல், உணர்வு எதுவுமே என் புத்தியின் கட்டுப்பாட்டில் இல்லை. அந்த சாத்தான் தான் ஆட்டிப் படைத்தது. எனக்காக அவமானப்பட்ட என் நண்பர்களை நானும் அவமானப்படுத்த தொடங்கினேன். புகைப் பழக்கமும் மதுப் பழக்கமும் கட்டுபாடின்றி ஒட்டிக்கொண்டன. நண்பர்கள், என் உயிர் நண்பர்களால் என் தற்கொலை எண்ணம் தடுக்கப்பட்டது, புகைப்பழக்கமும் மதுப்பழக்கமும் கட்டுப்படுத்தப்பட்து. தாய் தருவது முதல் பிறவி. அதற்குபிறகு ஒவ்வொரு முறையும் நமக்கு மறுபிறவி தருவது நம் நண்பர்களே.

அப்படி எனக்கு மறுபிறவி ஏற்படுத்திக் கொடுத்த நண்பர்களை உடனே தொடர்பு கொண்டு சற்று முன் தொலைபேசியில் வந்த தகவலைச் சொன்னேன். நீ என்ன நினைக்கிறாய் உன் உள் மனசு என்ன சொல்கிறது என்று கேட்டவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

ஒரு புனிதமான உறவைத்தரும் பந்தம் உருவாவது காதலிலும் வாழ்க்கையிலும் தான். காதலும் வாழ்க்கையும் வெவ்வேறல்ல. பரஸ்பரம் நம்பிக்கை மிக மிக முக்கியம். அப்போதுதான் இருவரின் பார்வையும் ஒற்றைப் பிம்பமாக பிரதிபலிக்கும். கணவன் மனைவியின் உறவு என்பது முகம் பார்க்கும் கண்ணாடியைப் போன்றது. அந்த உறவை, கண்ணாடியை ஒரு முறை தவறவிட்டுவிட்டாலும், உடைந்த அதன் பாகங்களை மீண்டும் பழையபடி ஒட்டவைக்க முடியாது. பின்பு அது வாழ்கையின் ஒற்றை பிம்பத்தை எப்போதும் காட்டாது.

மறுபிறவி தந்தவர்கள் தான் என் காதலுக்கு கல்லறையும் கட்டினார்கள்.

அவளை கடைசியாக சந்தித்த அன்று அவளிடம் நான் பொக்கிஷமாக பாதுகாத்திருந்த பொருட்கள் அனைத்தையும் தந்துவிட்டு ஏதும் பேசாமல் வந்துவிட்டேன். புரிந்து கொண்டிருப்பாள்.

ஏதாவது பேசி எனக்கு அவள் ஏற்படுத்திய வலியை அவளுக்கு திருப்பிக் கொடுக்க எனக்கு மனம் ஒப்பவில்லை.

காதலை அதுவும் முதல் காதலை நினைவு படுத்தும் பல நிகழ்வுகள் என் பின் வாழ்க்கையில் வரப்போகிறது என்று அப்போது நான் அறியவில்லை.

"தகுதியற்றவர்களின் மேல் நாம் வைக்கும் அளவுக்கு அதிகமான அன்பும் நம்பிக்கையும் பலமடங்கு துன்பத்தையே திருப்பித் தருகிறது" சரியாப்பா.... என்று வாரமலரில் வெளி வந்திருந்த ஒரு பொன் மொழியைப் படித்துக் கூறிய மகளைப் பார்த்து.... சரியென்றேன்.

குறிப்பு 1: சிறு கதை எழுத ஒரு சிறு முயற்சி. குறை நிறைகளை பின்னூட்டத்தில் தயவுசெய்து சுட்டிக்காட்டுங்கள்.
குறிப்பு 2: இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையே.

Friday, February 10, 2012

நட்பு





கொஞ்சம்
உங்கள் பார்வையை
உயர்த்திப்பாருங்கள்...
என்
அழகான
புன்னகையும்
கண்களும்
உங்களுக்கு நட்பாகிவிடும்...


Sunday, January 8, 2012

படித்ததில் பிடித்தது - 2



வாழ்க்கையில் இரண்டு குறிக்கோள்கள் இருக்கவேண்டும். விரும்பியதை அடைவது; அடைந்ததை அனுபவிப்பது. பெரும் புத்திசாலிகளால் மட்டுமே இரண்டாவது குறிக்கோளை அடையமுடியும்.
--லோகம் பி. ஸ்மித்

ஜெயிக்கறதுக்குப் பேர் காதல் இல்லை. மதிக்கறதுக்குப் பேர் தான் காதல்.
--பாலகுமாரன்

நமக்கு நன்றாகத் தெரிந்த விஷயங்களில் தான் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும்
--ஆர்தர் ஸ்பியர்


ஒன்றைச் செய்ய விரும்பினால் வழியைக் கண்டறிகிறாய். செய்யாமல் இருக்க விரும்பினால் காரணங்களைக் கண்டுபிடிக்கிறாய்.



தோற்றுவிடுவேனோ என்று ஒருவன் தயங்கிக் கொண்டிருக்கும் போதே, நிறைய தோல்விகள் கண்ட ஒருவன் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறான்.
--ஹென்றி. சி. லிங்க்.

முயற்சி செய்யும் வரை உங்களால் என்ன முடியும் என்பது உங்களுக்குத் தெரியாது.
--ஹென்றி ஜேம்ஸ்




தோல்வி என்பது மேலும் புத்திசாலித்தனமாக நம் வேலையைத் துவங்குவதற்கான மற்றொரு வாய்ப்பு.
--ஹென்றி ஃபோர்டு

தப்பு செய்யாதவர்கள் என்பவர்கள்
எதையுமே புதிதாக செய்ய முயற்சிக்காதவர்கள்.


முதலில் கீழ்படியக் கற்றுக்கொள்.
கட்டளையிடும் பதவி தானே வரும்!
முதலில் வேலைக்காரனாயிருந்து பழகு.
எஜமானனாக நீ தகுதி பெறுவாய்!
--சுவாமி விவேகானந்தர்

நடக்குமோ நடக்காதோ
நோக்கம் உயர்வானதாய் இருக்கவேண்டும்



பொறுமையாக இருந்தால்
தண்ணீரைக் கூட
சல்லடையில் அள்ளலாம்.
ஆனால் அது உறையும் வரை
காத்திருக்க வேண்டும்!

எவரைப்போல இருக்கவும் முயலாதே..
எவரையும் பின்பற்றாதே..
அப்படிச் செய்தால் உன் இருப்பு போலியாகும்.
அது தற்கொலையை விட மோசமானது.
நீ நீயாக இரு!
அப்போதுதான் நீ ஆதாரப் பூர்வமானவராக பொறுப்புள்ளவராக
உண்மையாக இருக்க முடியும்!
--ஓஷோ


அமைதி இல்லாதவனுக்கு இன்பம் இல்லை.
--கீதை

முழுக்க முழுக்க சர்க்கதையாக
இருந்து விடாதே.
உலகம் உன்னை விழுங்கிவிடும்!
முழுக்க முழுக்க எட்டிக்காயாக
இருந்து விடாதே.
உலகம் உன்னை உமிழ்ந்துவிடும்!
--பாரசீகப் பழமொழி



வெற்றி என்பது முடிவல்ல.
அது ஒரு தொடர் பயணம்!




Wednesday, January 4, 2012

மலரும் நினைவுகள் - 5 (காதலிக்கிறோம்)

காதலிக்கிறோம்



எனக்காக நீ
கவிதையாகவில்லை...
உனக்காக நான்
கவிஞனாகவில்லை...

ஆனாலும்
காதலிக்கிறோம்...

கைகோர்த்துக் கொண்டு
கடற்கரை செல்லவில்லை...
கடனுக்குச் சுண்டல்
வாங்கவில்லை...

ஆனாலும்
காதலிக்கிறோம்...

உன்னிடம் எதையும்
எதிர்பார்க்கவில்லை
உன்னைத் தவிர...
என்னிடம்
எதுவுமில்லை
என்னைத் தவிர...

அதனால்
காதலிக்கிறோம்...

Tuesday, January 3, 2012

மலரும் நினைவுகள் - 4 (மனம்)

மனம்



பார்க்கத் துடிக்கும்!
பார்க்கவில்லை என்றால்
பைத்தியம் பிடிக்கும்...

பேசத் துடிக்கும்!
பேசவில்லை என்றால்
உறக்கம் உறங்கிவிடும்...

அர்த்தமற்ற பேச்சுக்கள்
அவசியமற்ற பார்வைகள்...

தேவையில்லா உறவுகள்
தேவைப்பட்டால் கனவுகள்...

பத்துநாள் காதலி
பத்தாம் நாள் தங்கச்சி...

அழகான முகத்தில்
அரை அங்குல தாடிகள்...

அனுபவசாலி என்று
அடுத்தவருக்கு அறிவுரை...

அழகில் இருக்கும்
அழிவை எண்ணி
கடைசியில் கண்ணீர் விடும்...