படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Friday, November 18, 2011

நீ ஒரு சுயநலவாதிதானே?



Thursday, November 17, 2011

உலகில் இறக்கும் ஐந்தில் ஒரு குழந்தை நம்முடையது

சமீப காலங்களில் இந்தியாவில் அதிக அளவு இளம் குழந்தைகள் இறந்து வருகின்றன என்பது அதிர்ச்சியான தகவல். கடந்த சில நாட்களில் பீகாரில் 38 குழந்தைகள் இறந்துள்ளன. அதிலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பது அதிகரித்து வருகிறது. இது எந்த அளவு என்றால் உலகில் இறக்கும் ஐந்தில் ஒரு குழந்தை நம்முடையது; அதாவது 20%. என்ன கொடுமை என்கிறீர்களா. இது நிதர்சன உண்மை.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் குழந்தை இறப்பு விகிதம் மிகவும் குறைவு. அவர்கள் பிறந்து ஓராண்டு முடிந்த குழந்தைகளுக்கும் அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் தேவையான மருத்துவ பரிசோதனைகளை செய்து, ஏதாவது குறையிருப்பின் தேவையான சிகிச்சைகளை சரியாண நேரத்தில் அளித்துவிடுகின்றனர். இதன் மூலம் குழந்தைகளின் இறப்பு விகிதம் கட்டுப்படுத்துவதுடன் அவர்கள் ஆரோக்கியமாக வளர்வதற்கும் இது பேருதவியாக இருக்கிறது.

கீழே தந்துள்ள சில குறிப்புக்கள் குழந்தைகளை ஆரோக்கியமா வளர்க்க உதவும்:


  • குழந்தை பிறந்தவுடன் சீம்பாலை முதல் ஒரு மணிநேரத்திற்குள் குழந்தைக்குப் புகட்ட வேண்டும்.
  • தாய்மார்கள் கட்டாயம் தாய்ப் பாலை குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் ஆறு மாத காலம் வழங்கவேண்டும். அதிக பட்சமாக ஓராண்டு அல்லது பால் இருக்கும் வரை தரலாம்.
  • தாய்ப்பால் மிகச்சிறந்த இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை குழந்தைகளுக்கு அளிக்கிறது.
  • தாய்மார்கள் கர்ப்பம் தரித்த காலம் முதல் ஊட்டச்சத்து மிகுந்த உணவை எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • குழந்தை பிறந்தவுடன் பால் அதிகம் சுரக்கும் வகையில் உள்ள உணவு வகைகளைத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவேண்டும்.



  • வசதியுள்ளவர்கள் தங்களது பகுதியில் உள்ள ஏதாவது ஒரு வசதியற்ற குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்கலாம்.
  • அதி முக்கியமான தடுப்பூசிகளை அரசாங்கம் இலவசமாக அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கவேண்டும்.
  • அரசாங்க மருத்துவ மனைகளில் தேவையான மருத்துவ வசதிகள் இல்லாமலிருப்பின், அருகில் உள்ள அத்தகைய மருத்துவ வசதியுள்ள, தனியார் மருத்துவமனைகள் குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ வசதியை இலவசமாக வழங்குவதைக் கட்டாயமாக்கலாம் அல்லது செலவுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளலாம்.


ஆரோக்கியமான குழந்தைகளே வருங்கால ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும்.



Wednesday, November 16, 2011

நாட்டு நடப்பு - 2 (ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?)

திங்கள் அன்று காலை சென்னைக்கு ஆம்னி பேருந்தில் வந்தேன். பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகே நிற்காமல் ஆம்னி பேருந்து நிலையத்தினுள் வந்து நின்றது. என் முன்னால் இறங்குவதற்கு நின்ற நபருக்கு அங்கிருந்து அதிக தூரம் நடக்க வேண்டும் என்பதால் பெருங்கோபம் வந்துவிட்டது. ஓட்டுநரிடம் கடுமையாக வாக்குவாதத்தில் இறங்கிவிட்டார். ஓட்டுநரும் இன்று ஒருவன் சிக்கிட்டான்யா என்ற தோரனையில் அந்த நபருடன் சண்டையிட்டுக்கொண்டிருந்தார். இதன் முடிவில் ஓட்டுநர் கண்டுபிடித்த விசயம் என்ன என்றால் "சட்டம் அனைவருக்கும் பொது". என்ன கொடுமை பார்தீங்களா? சட்டத்தைப்பற்றி யார் யாரெல்லாம் பேசுவது....

நான் தங்கியிருக்கும் இடத்திற்கு வர கோயம்பேட்டில் ஒரு பேருந்தில் ஏறினேன். அதிகாலையிலேயே அதிக மக்கள் உள்ளிருந்தனர். இரண்டு கையுடமைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டு ஏறி ஒரு இருக்கையின் அருகே நின்றேன். அந்த இருக்கையில் அமர்ந்திருந்த யுவதி உடனடியாக என்னிடம் இருந்த மடிக்கணிணியை வாங்கி தன்னுடன் வைத்துக்கொண்டார். அவரின் செயல் அந்த கூட்டத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு முன்னர் நின்றவர்களை நேட்டம்விட்டேன். எனக்கு மிக அருகில் நின்றவர்களில் இருவர் மடிக்கணிணி வைத்துக்கொண்டு சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். அந்த யுவதி எனக்கு மட்டும் ஏன் உதவ வேண்டும்? ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?

அலுவலகங்களில் வேலை செய்யும் பெரும்பாலான பெண்கள் (நான் அனைவரும் என்று கூறவில்லை) அலுவலகத்திற்கு வந்தவுடன் துப்பட்டாவை கழட்டி வைத்துவிடுகிறார்கள். வீட்டிற்குச்செல்லும் முன் அணிந்து கொள்கின்றனர். அலுவலக்தில் ஏற்ககுறைய ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு பேர் இருக்கின்றனர். ஆனால் பேருந்தில் வீட்டிற்குச் செல்லும் வழியில் அதிகபட்சம் சுமார் ஐநூறு பேரைத்தான் கடந்து செல்லவேண்டியிருக்கும். பிறகு ஏன் இப்படி என்று புரியாமல் என்னுடன் பணிபுரியும் நண்பரிடம் கேட்டதற்கு உமக்கு வயசாகிவிட்டது, வயதுக்கு தகுந்த ஆராய்ச்சியை மட்டும் செய்யும் என்றார். ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?

Monday, November 7, 2011

ஒரு சிறிய நினைவுகூறல் - 3

சில வருடங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் கணக்கு தொடங்கியவுடன், எங்கள் பள்ளியின் பெயரைக் கொண்டு தேடியதில், கிடைத்த அந்த நண்பரின் புகைப்படத்தினை கண்டவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பேஸ்புக்கின் உதவியால் சில நிமிடங்களில் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். எங்களது பேச்சு சில மணிகள் கடந்தும் தொடர்ந்தது. பல தொடர்புகள் தொலைந்து போன நண்பர்களின் மீள் அறிமுகம் கிடைத்தது. நீண்ட நேரம் அவர் நினைவாகவே இருந்தது.

சிறு கடந்த கால அறிமுகம்: பள்ளியில் என்னுடன் விடுதியில் தங்கிப்படித்த அந்த நண்பர் இறுதித்தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியுற்றார். நாங்கள் படிக்கும் காலத்தில் நல்ல நண்பர்களாக இருந்துள்ளோம் ஆனால் கடிதம் தவிர ஏனைய தகவல்தொடர்புகள் பிரபலமாகாத காலம் அது என்பதால் பள்ளி இறுதி வகுப்பிற்குப் பின் அவருடன் தொடர்புகொள்ள இயலாமல் போய்விட்டது. அவர் பெற்ற தோல்வியும், மற்றவரிடம் தொடர்பு கொள்ள இயலாத மனநிலையை அவருக்கு ஏற்றபடுத்தி விட்டது. அந்த காலகட்டத்தில் அவருக்கு ஏற்பட்ட அவமானங்கள் ஏராளம்.

அதன்பிறகு மனம் தளராமல் அடுத்த ஆண்டு அந்த பாடத்தில் தேர்ச்சி பெற்று, இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளையும் முடித்து விட்டார். தற்சமயம் திருமணம் முடித்து அமெரிக்காவில் அவர் துறைசார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இன்று அவர் வாழ்க்கையில் வெற்றி பெற்றாலும் பட்ட அவமானங்களும் வேதனைகளும் இன்றும் அவரின் நினைவில் உள்ளது.

தேர்வில் தோல்வியடைவதை, வாழ்வில் தோல்வியடைவதைப்போல் ஏன் சமுதாயம் சித்தரிக்கவேண்டும். இதன் உச்சகட்டம் தான் நிறைய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது. சமீப காலங்களில் இத்தகைய தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒருவன் தேர்வில் தோல்வியடையும் போது இச்சமுதாயமும், பெற்றோர் மற்றும் நண்பர்கள் மிகவும் பொறுப்புடன் இருக்க வேண்டும். பாடத்தில் தோல்வி என்பது வாழ்க்கையின் தோல்வி அல்ல. வாழ்க்கையில் சிறு தடைதான். அதிலிருந்து அவன் மீள்வதற்குரிய சூழ்நிலையை நாம் உருவாக்கித் தர வேண்டுமே தவிர அவனை குற்ற உணர்ச்சியில் தவிக்க விடக்கூடாது.

பள்ளித் தேர்வுத் தோல்வியை ஏளனமாக்குபவர்களுக்கு என் நண்பனின் வாழ்க்கை ஒரு பாடமாக இருக்கும் என்ற எண்ணத்தில் இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

Thursday, November 3, 2011

இழப்பதென்பது ஒரு தொடர்கதையோ?



கருப்பையைத் தொலைத்து குழந்தையானேன்
குழந்தையைத் தொலைத்து சிறுவனானேன்
சிறுவனைத் தொலைத்து இளைஞனானேன்
இதயத்தைத் தொலைத்து காதலனானேன்
காதலைத் தொலைத்து கவிஞனானேன்
இளைஞனைத் தொலைத்து கணவனானேன்
காலத்தைத் தொலைத்து முதியவனானேன்
உயிரைத் தொலைத்து கல்லறையானேன்

இழப்பதென்பது ஒரு தொடர்கதையோ?

Tuesday, November 1, 2011

விளம்பரம் முக்கியம் அமைச்சரே!

இந்த தீபாவளிக்கு எங்களது பகுதியில் இரண்டு பெரிய நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியாகின. நல்ல விசயம் தான், மக்களின் பொழுதுபோக்குக்காக இந்தப் படங்கள் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தாலும் நான் வருத்தப்படும் ஒரு செய்தியும் இதில் உள்ளது. இது இந்த இரண்டு திரைப்படங்கள் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. இப்பொழுது வெளியாகும் அனைத்து திரைப்படங்களுக்கும் இது பொருந்தும்.

மொக்கை போடாமல் விசயத்திற்கு வருகிறேன். ஒவ்வொரு திரையரங்கின் முன்பும் சராசரியாக 10 முதல் 15 பெரிய அளவிளான விளம்பரங்கள் அந்தந்த நடிகர்களின் மன்றங்களின்(வேண்டும் என்றே நற்பணி என்ற வார்த்தை உபயோகம் தவிர்க்கப்பட்டுள்ளது) சார்பில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொறு விளம்பரங்களையும் அச்சடிக்க மற்றும் வைக்கும் செலவு கிட்டத்தட்ட ரூபாய் 3000 முதல் 5000 வரை வரும். ஒரு திரையரங்கில் சுமார் 10 விளம்பரங்கள் சராசரியாக ரூபாய் 3500 விலையில் வைக்கப்பட்டது எனில் மொத்தம் ரூபாய் 35,000 செலவு ஆகியிருக்கும். தற்பொழுதெல்லாம் தமிழ்நாட்டில் ஒரு திரைப்படம் சுமார் 500 முதல் 700 திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. நம் கணக்கிற்கு 500 திரையரங்குகள் என்று எடுத்துக் கொண்டாலும் ரூபாய் ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சம் வருகிறது. (1,75,00,000). இது ஒரு நடிகரின் ஒரு திரைப்படத்திற்கான தமிழ்நாட்டிற்குள் செலவிடும் தொகை பற்றிய கணக்கு. ஆண்டு முழுவதும் எவ்வளவு திரைப்படங்கள் வெளிவருகிறது என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இந்த செலவு எந்த வகையிலும் நம் சமுதாயத்திற்கு பயன் தரக்கூடியது அல்ல. ஆகவேதான் நான் இவைகளை நற்பணி மன்றங்கள் அல்ல என்று கூறினேன். என்னுடைய வாதம் இவர்கள் நடத்துவது நற்பணி மன்றமா இல்லையா என்பதைப் பற்றியதல்ல. இப்படி விளம்பரங்கள் வைப்பதின் நோக்கம் என்ன அவை நிறைவேறியதா என்பதைப் பற்றி தான்.

ஏற்கனவே அந்த நடிகர்கள் பிரபலம். திரைப்படங்கள் வெளிவருவதற்கு முன்பே ஏதாவது ஒரு செயற்கைக்கோள் தொலைக்காட்சி வாங்கி அவர்கள் கொடுக்கும் விளம்பரங்களும் ஏராளம். மன்றங்கள் சார்பில் வைக்கப்படும் விளம்பரங்கள் முழுக்க முழுக்க வைப்பவர்களை விளம்பரப் படுத்திக் கொள்ளவே. இவ்வாறு விளம்பர தட்டிகளால் கிடைக்கும் விளம்பரம் நிச்சயம் தற்காலிகமானது தான். திரைப்படம் நன்றாக இல்லை என்றாலோ அல்லது திரையரங்கில் வேறு திரைப்படம் வெளிவந்தாலோ உடனே தட்டிகள் மாற்றப்படும்.

இந்த நடிகர்களின் மன்றங்கள் ஒருங்கினைந்து வெட்டி செலவுகள் மற்றும் விளம்பரங்களைத் தவிர்த்து நற்பணிகளுக்காக செலவிட்டால் நம் சமுதாயத்திற்கு கிடைக்கும் நன்மைகள் பல அதன் மூலம் இவர்களுக்குக் கிடைக்கும் விளம்பரம் நிரந்தரமானது.

இன்றைய நிலவரப்படி எத்தனையோ அரசுப் பள்ளிகளுக்கு போதுமான கட்டமைப்புகளும், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும், உடற்கல்வி ஆசிரியர்களும் இல்லை. ஆசிரியர் பயிற்சி முடித்து அரசு வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தனியார் பள்ளிகளிலும் மற்ற இடங்களிலும் சொற்ப சம்பளத்தில் பணியில் உள்ளனர். நடிகர் மன்றங்கள் அரசு பள்ளிகளில் உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் உதவியுடன் அரசு வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவர்களின் தகுதிக்கேற்ப தேவைப்படும் அரசு பள்ளிகளுக்கு பாடம் சொல்லித் தருவதற்குரிய ஊதியங்களை வழங்கினால் போதும். ஒரு தற்காலிக ஆசிரியருக்கு ரூபாய் 8,000 மாத சம்பளம் வழங்கினால் ஆண்டுக்கு ரூபாய் 96,000 வரும். ஒரு படத்திற்கு செலவாகும் தொகையைக் கொண்டு சுமார் 200 ஆசிரியருக்கு ஒரு ஆண்டு முழுவதும் சம்பளம் வழங்க முடியும். ஒரு ஆசிரியரால் 30 மாணவர்கள் பயன் பெற்றாலும் கூட சுமார் 6000 மாணவர்கள் பயன் பெற முடியும். உதவி பெறும் அந்த ஆசிரியரும், மாணவர்களும், அவர்கள் சார்ந்த குடும்பங்களும் நிச்சயம் வாழ்க்கை முழுவதும் அந்த மன்றங்களை மறக்க மாட்டர். இவ்வாறு கிடைக்கும் விளம்பரம் நிச்சயம் தற்காலிகமானது கிடையாது. அந்த பள்ளிகளில் வேண்டுமானால் இவர்கள் விளம்பரத் தட்டிகளை வைத்துக்கொள்ளட்டும்.

நடிகர் மன்றங்கள் வைக்கும் விளம்பரங்கள் மற்றவர்களுக்குத் தூண்டுகோலாக அமைய வேண்டுமே தவிர முகம் சுழிக்க வைப்பதாக இருக்கக்கூடாது.