படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Thursday, December 29, 2011

எங்கே சென்றது நிதானம். எங்கே சென்றது மனிதாபிமானம்.



இளகிய மனம், விபத்து பற்றிய செய்தியை விரும்பாதவர்கள் தயவுசெய்து மேற்கொண்டு படிக்க வேண்டாம்.



இன்று அலுவலகத்தில் வேலைப்பளுவின் காரணமாக 10 மணிக்கு மேல்தான் வீட்டிற்கு கிளம்ப முடிந்தது. வரும் வழியில் சகோதரர் ஒருவர் மோட்டார் வண்டியில் இருந்து தவறி சாலையில் விழுந்துவிட்டார். தலையில் பலமான அடி. அதிகப்படியான உதிரம் வழிந்துகொண்டிருந்தது. சிறு கூட்டம் கூடிவிட்டது. நானும் என்னுடைய நண்பரும் எங்களது வண்டியை நிறுத்திவிட்டு அடிபட்டவரின் அருகில் சென்று பார்த்தோம். அனைவரும் வேடிக்கை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்தனரே அன்றி ஒருவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனடியாக நானும் என் நண்பரும் அவரவர் அலை பேசியில் 108யை அழைத்து தகவல் கொடுத்துவிட்டு (அவர்கள் வர ஒரு மணிநேரம் ஆகும் என்று சொன்னதெல்லாம் வேறு கதை... அதைப்பற்றி தனியாக ஒரு இடுக்கையில் பேசுவோம்), அடிப்படவரின் கால் சட்டைப்பையைத் துலாவினோம். ஒரு பையில் அவருடைய அலைபேசியும் மற்றொரு பையில் சில காகிதங்களும் இருந்தன. அவரின் அடையாளம் அலுவலகமுகவரி எதுவும் கிடைக்கப் பெறவில்லை. அருகில் இருந்த ஒருவர் அடிபட்டவரின் அலைபேசியை எடுத்து கடைசியாக பேசிய எண்ணைத் தொடர்பு கொண்டு அடிபட்ட விபரம் இடத்தினை கூறினார். இதற்கிடையில் அந்த வழியில் வரும் வாகனங்களை நிறுத்தி அடிபட்டவரை மருந்துவமனைக்கு கொண்டு செல்லும் முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. ஒருவரும் வாகனத்தை நிறுத்த முன்வரவில்லை. ஆட்டோக்களும் கூட அவரை ஏற்ற மறுத்துச் சென்றுவிட்டனர். இப்படியாக 10 நிமிடங்கள் சென்றுவிட்டன. அவரிடம் உயிர் இருந்துகொண்டுதான் இருந்தது ஆனால் உதிரமும் தொடர்ந்து வழிந் துகொண்டேயிருந்தது. பின்பு அருகில் இருந்த ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான அவசர ஊர்தியை அழைத்து வந்து அடிபட்டவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினோம். அவசர ஊர்தி புறப்படும் சமயம்தான் காவல் துறையைச் சார்ந்தவர்கள் வந்தார்கள். அடிபட்டது 10 மணி 15 நிமிடம். 108க்கு தகவல் குடுத்த நேரம் 10 மணி 21 நிமிடம். மீண்டும் 108க்கு பேசிய நேரம் 10 மணி 38 நிமிடம். அப்போது அவர்கள் சொன்னது, அவசர ஊர்தி 10 மணி 25 நிமிடத்திற்கே புறப்பட்டுவிட்டது என்று. வேறொரு தனியார் அவசர ஊர்தியில் அவரை ஏற்றிய நேரம் 10 மணி 45 நிமிடம். இது நடந்தது சென்னையின் மிக முக்கியமான அதிக போக்குவரத்து நிறைந்த சாலை. ஒரு கிலோ மீட்டருக்குள்ளேயே காவல் நிலையம், மருத்துவமனை, அவசர ஊர்தி நிலையம் என சகல வசதியும் உள்ள இடம். இத்தனையிருந்தும் அவரை அவசர ஊர்தியில் ஏற்றவே 30 நிமிடங்கள் ஆகிவிட்டது.



அதன் பின்பு வீடு வரும் வரை என்னால் சமாதானம் அடைய முடியவில்லை. ஏதோ தோற்று விட்டதைப் போன்ற வெறுப்பு. நாளை இதே போன்று நமக்கோ நமக்கு தெரிந்தவருக்கோ நடந்தால், இச் சமுதாயம் இப்படித்தானே வேடிக்கை பார்க்கும் என்ற பயம் கலந்த அருவருப்பு.

நமக்கெல்லாம் உடனடியாகத் தேவையான ஒன்று விழிப்புனர்வு. ஒருவருக்கு அடிபட்டாலோ அல்லது அவசர உதவி தேவையென்றாலொ என்ன செய்ய வேண்டும் என்ற அடிப்படையான அவசியமான பயிற்சி தேவை. பதட்டத்தில் தவறு செய்ய நிறைய வாய்ப்பு உள்ளது. கோல்டன் அவர்ஸ் எனப்படும் அந்தத் தருணத்தில் நிதானமும் என்ன செய்யவேண்டும் என்ற தெளிவும் மிக முக்கியம்.


  • அனைத்து பள்ளி, கல்லூரி, தனியார் மற்று அரசுத் துறை நிறுவனங்களில் உள்ள அனைவருக்கும் தகுந்த இடைவெளியல் இத்தகைய சூழ்நிலையில் என்ன செய்யவேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சி கட்டாயம் தரவேண்டும்.
  • வாகனங்களில் பயணம் செய்பவோர் கட்டாயம் தங்களது ஏதேனும் ஒரு அடையாள அட்டையுடன் இரத்தவகை மற்றும் அவசர தொடர்பு எண் மற்றும் முகவரிகளை வைத்திருக்கவும்.
  • 108 போன்றவர்களை நாம் அழைத்தவுடன் அவர்களே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும், மருத்துவ மனைக்கும் தகவல்களைத் தெரிவிக்கலாம். அவர்களிடம் அவசர ஊர்தி அருகில் இல்லை என்றால் அருகில் உள்ள தனியார் அவசர ஊர்தியை தொர்பு கொள்ளும் வசதி போன்றவை மிக உதவியாக இருக்கும்.
  • அடிபட்டவரையோ அல்லது அவர உதவி தேவைப்படுவோரையோ பார்க்க நேர்ந்தால் தயவு செய்து உங்களது வாகனத்தில் இடமளித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவுங்கள். அப்பொழுது நீங்கள்தான் கடவுள். உங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று கருதுங்கள்.


ஏன் இந்த அவசரம். நமது வாழ்க்கையை நாம் தான் வாழ முடியும். அதற்கு நாம் நலமுடன் இருக்க வேண்டும்.


அந்த நண்பர் விரைவில் நலமடைந்து நம்முடன் வாழ இறைவனைப் பிராத்திப்போம்.

முடிந்தவரை நிதானத்துடனும் மனிதாபிமானத்துடனும் வாழ முயற்ச்சிப்போம்.



Wednesday, December 28, 2011

மலரும் நினைவுகள் - 3 (மறக்கத்தான் முடியுமா)


மறக்கத்தான் முடியுமா?


மறக்கத்தான் முடியுமா?
காய்ந்த பேருந்து நிறுத்தத்தில்
நீ மட்டும் பசுமையாய்
நின்ற காலங்களை...

மறக்கத்தான் முடியுமா?
கல்லூரிக்குள் கால்வைத்த
முதல் நாள் முகவரிகளை...

மறக்கத்தான் முடியுமா?
நாம் முதன் முதலில்
பார்த்த திரைப்படத்தை...

மறக்கத்தான் முடியுமா?
நம்மை இணைத்து மற்றவர்கள்
பேசிய வார்த்தைகளை...

மறக்கத்தான் முடியுமா?
உன் திருமணத்தில்
மாப்பிளை தோழனாக
நான் நின்றதை....

அன்பே
நம் நினைவுகளை மட்டுமே
என்னால் மறக்க முடியவில்லை!
உன்னையல்ல...

Tuesday, December 27, 2011

மலரும் நினைவுகள் - 2 (காதல்)

காதல்



சிறகடித்துப் பறக்க நினைத்து
சிந்தனை வயப்பட்டேன்...

மனம் விட்டுப் பேச நினைத்து
மயங்கி நின்றேன்...

சாதனை என்று நினைத்து
சரிந்து விழுந்தேன்...

காதலிப்பதாக நினைத்து
கவிதை மட்டும் எழுதினேன்...


மாறுதல்


தங்கைக்கோ ஆச்சரியம்
தாய்க்கோ பெருமகிழ்ச்சி
தந்தைக்கோ சந்தேகம்...
ஆம்
இப்பொழுது தினமும்
கோவிலுக்குச் செல்கிறேன்
தங்கைக்குத் துணையாக...


Monday, December 26, 2011

படித்ததில் பிடித்தது


நண்பர்களே கீழே தொகுக்கப்பட்டுள்ளது எனது சொந்த சரக்கல்ல. படித்தவைகளில் இருந்து பிடித்தவைகளைத் தொகுத்துள்ளேன்.

"மன உறுதியை சோதனை செய்யவே தோல்விகள் ஏற்படுகின்றன. ஆகவே இத்தகைய சோதனைகளில் நீங்கள் தோற்று விடக்கூடாது"

"உங்களின் நம்பிக்கையின் அளவிற்குத்தான் உங்களால் ஆசைப்பட முடியும். நீங்கள் ஆசைப்படும் அளவிற்குத்தான் உங்களால் அடைய முடியும்"

"வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் நாம் எங்கு நிற்கிறோம் என்பதல்ல. எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே"



"தவறு செய்து விட்டதாக ஒப்புக் கொள்ள வெட்கப்படாதீர்கள். ஒப்புக் கொண்டால் நேற்றை விட இன்று நீங்கள் அதிக புத்திசாலியாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்"
--அலெக்ஸாண்டர் போப்.

"வேலை, தொடர்ந்த இடைவிடாத கடினமான வேலைதான் நீடித்த பலன்களைக் கொடுக்கும். பாதி முயற்சி செய்தால் பாதிப்பலன் கிடைக்கும் என்று நினைக்காதீர்கள். அதில் பலனே கிடையாது"
--ஹாமில்டன் ஹோல்ட்

"தனிமையில் பலசாலி வளர்கிறான். பலவீனன் தேய்கிறான்"
--கலீல் கிப்ரான்

"வேறொருவர் வந்து நமக்கு அமைதியைத் தர முடியாது. வேறொருவர் நம்மை அன்புமயமாக்க முடியாது. வேறொருவர் நமக்கு மகிழ்ச்சியைத் தந்துவிட முடியாது. இவற்றையெல்லாம் நமக்குள்ளேயே ஏற்படுத்திக் கொள்ளுவது எப்படி என்று நாமே கற்றுக் கொள்ள வேண்டும்"


"இன்றைய நமது கடமையும் இன்றைய நாளும் மட்டுமே நமக்குச் சொந்தமானவை. பலன்கள் எதிர்காலத்தில் நிர்ணயிக்கப்படுகின்றன"

"அளவுக்கு மிஞ்சிய தூக்கம், மயக்கம், தேவையில்லாத பயம், ஆத்திரம், சோம்பல், எதையும் தாமதமாகச் செய்தல் இவை ஆறும் முன்னேற்றப் பாதையின் முட்டுக் கட்டைகளாகும்"
--விதுரநீதி

"பேசாமல் இருப்பது நல்லது. ஆயினும் அவ்வப்போது பேசுவது சிறந்தது. இரண்டு விஷயங்கள் அறிவுக்குப் பொருந்தாதது. பேச வேண்டியபோது பேசாதது. பேச வேண்டாத போது பேசுவது"
-- சாஅதி

"இன்றைய நிகழ்வுகளை அனுபவிப்போம். நாளைய நிகழ்வுகளை வடிவமைப்போம்"


Sunday, December 25, 2011

மலரும் நினைவுகள்

நீண்ட நாட்களாக தவணையிலிருந்த வீடு சுத்தம்செய்யும் வேலையை சென்ற வாரம் செய்ய முடிந்தது. அப்போது வீடு சுத்தமானதுடன் சில பல மலரும் நினைவுளும் கிட்டியது. கல்லூரியில் படித்த காலத்தில் கிறுக்கிய சில கவிதைத் தாள்களும் கிடைத்தன. இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே.... அதேதான்.... கீழே படியுங்கள்...


எண்ணங்களாக...

வாழ்க்கைப் பயணத்தில்
சில காலம் கூடிய
நினைவுகள்...

உயரப்பறந்து
வானைத் தழுவ நினைத்த
நினைவுகள்...

மெளனங்களின்
புன்னகை வார்த்தைகளால்
புதிருக்கு விடைதேடிய காலங்கள்....

மொத்தத்தில்
கல்லூரி வாழ்க்கை
கரையாத கல்வெட்டாக...

என்றென்றும்
என்னுள்ளே
எண்ணங்களாக....


உதவி

அன்பே
என் இதயத்தை
நீயே வைத்துக்கொள்...

உன் கணவனுக்கு
இல்லையென்றால்
கொடுத்துவிடு...

குறிப்பு: தங்களுக்கு ஏற்பட்டுள்ள, ஏற்படப்போகும் அசெளகரியங்ளுக்கும் வருந்துகிறேன்...