என்னால் கனவென்று ஒதுக்கவோ ஒதுங்கவோ முடியவில்லை. எதற்கெடுத்தாலும் அரசியல்வாதிகளையும் அரசாங்கத்தையும் குறை கூறிக்கொள்ளும் நாம்மால் எதுவும் செய்ய முடியாதா?
சுய ஒழுக்கம், நேர்மை, கட்டுப்பாடு, கல்வி, உழைப்பு தான் ஒரு குடும்பத்திலும் பின் சமுதாயத்திலும் பின் ஒரு நாட்டிலும் பிரதிபலிக்கிறது. என்னைப் பொறுத்தவரை பெரும்பாலான சக மனிதர்களின் ஒழுக்கமும், கட்டுப்பாடும், நேர்மையும் தான் அம் மக்களை ஆளுபவர்களின் மூலம் வெளிப்படுகிறது. தனி மனிதனிடம் ஏற்படாத எந்த மாற்றமும் சமுதாயத்திலும் சரி நம்மை ஆள்பவர்களிடமும் சரி ஏற்பட வாய்ப்பே இல்லை. நம் தவறுகளையும் பிழைகளையும் அடுத்தவர் மேல் சுமத்தி பழக்கப்பட்டு வளர்ந்த நமக்கு இது உறைக்க சில காலங்கள் அல்லது சில பல தலைமுறைகள் கூட ஆகலாம்.
அசிங்கத்தை நடுவீட்டில் வைத்துவிட்டு நாறுகிறது குமட்டுகிறது என்பது போல் அல்லவா இருக்கிறது அரசியல்வாதிகளை விமர்சிப்பது. எதை எங்கு வைக்கவேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்கிறோம். மக்களால் மக்களுக்காக மக்களைக் கொண்டு நடத்தப்படுவதே நம் குடியரசு. நாமும் நம் மக்களும் பிச்சைக்காரர்களாக மாறியிருப்பதற்கு (இலவசங்களை சொல்கிறேன்) நாம் தான் காரணம். பிச்சைக்காரர்கள் இருக்கும் வரை இத்தகைய ஈகை உள்ளங்கள் (அரசியல்வாதிகள்) திருந்தப்போவதில்லை.
நான் இதுவரை மற்றவர்களை பாதிக்கும் ஒரு பொய் கூட சொன்னது இல்லை, ஒரு முறை கூட வாக்களிக்கத் தவறியதே இல்லை, லஞ்சம் கொடுத்ததில்லை, அரசாங்கத்தையும் சட்டத்தையும் ஒரு பொழுதும் ஏய்த்தது அல்லது ஏமாற்றியது இல்லை என்று உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள். நான் யாரையும் குறைசொல்ல வரவில்லை. நான் சொல்ல வருவது என்னவென்றால் எல்லாத் தவறுகளையும் நியாயப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்பதே.
ஒரு பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு ஐந்து லட்சங்கள் வரை செலவு செய்யும் ஒருவரிடம் நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்? பணியில் சேர பத்து லட்சங்கள் வரை செலவு செய்யும் ஒரு அரசு ஊழியரின் லஞ்சத்தை எப்படி ஒழிக்க முடியும்? பள்ளியில் நம் குழந்தைகளின் எல்.கே.ஜி. சேர்க்கைக்கு எழுபத்து ஐந்தாயிரம் ரூபாய் வரை நன்கொடை (லஞ்சத்தின் மறுபெயர்) அளிக்க முன்வரும் நம்மிடம் எங்கே நேர்மை?
தனி மனித ஒழுக்கத்தையும் நேர்மையையும் கட்டுப்பாட்டையும் கல்வியையும் விதைப்பதில் பெரும் பங்கு நம் கல்விக் கூடங்களுக்கு உண்டு. இன்று அவைகளின் சேவையும் நேர்மையும் கட்டுப்பாடுமே தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகிய பிறகு விவாதத்திற்கு உட்பட்டதாகிவிட்டது.
நான் எல்லா தனியார் பள்ளிகளையும் குறை கூறவில்லை. எங்கு அரசு நிர்ணயத்துள்ள கட்டணங்களில் தரமான கல்வி கிடைக்கிறதோ அவைகளை நாம் கட்டயாம் அங்கீகரிக்க வேண்டும்.
கடந்த பதினைந்து இருபது ஆண்டுகளில் தான் தனியார் கல்வி நிறுவனங்கள் பெருத்து விட்டன. இவற்றில் பல, சேவையை மறந்து பணம் சம்பாதிக்கும் தொழில் நிறுவனங்களாக உருமாறிவிட்டன. இவைகளின் கவர்ச்சி விளம்பரங்களில் நாம் மயங்கி வியாபாரத்திற்கு துணைபோய்விட்டோம். மக்களின் ஆதரவையும் அரசாங்கத்தின் ஆதரவையையும் இழந்து இன்று அரசு பள்ளிகள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. "மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது" என்பது பழமொழி. அரசாங்கப் பள்ளிகளில் மட்டுமே படித்த நம்மில் பலர் இன்று நல்ல நிலைமைகளில் தான் உள்ளோம். அரசாங்கப்பள்ளி என்னும் மாடு வேண்டுமானால் இன்று இளைத்திருக்கலாம் ஆனால் அவை உருவாக்கிய கொம்புகளாகிய நாம் இளைத்ததில்லை. அரசாங்கப் பள்ளிகளை மீட்டெடுப்பது அரசின் கடமை மட்டுமல்ல அது நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.
தற்பொழுதுள்ள இளைய சமுதாயத்தில் உள்ள பெரும்பான்மையான குடும்பத் தலைவிகளில் 50% முதல் 60% பேர் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்து கொண்டு குடும்பங்களைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களில் பலர் சிறந்த இளநிலை அல்லது முதுநிலை கல்வி கற்றவர்கள். தெரிந்தோ தெரியாமலோ அவர்களின் அறிவு சரியான முறையில் பயன்படுத்தப்படாமலும் இருக்கிறது. இவர்களில் 5% முதல் 15% சதவீதம் பேர் தாராளமாக அவர்களின் நேரத்தையும் அறிவையும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 அல்லது 3 மணிநேரம் அளிக்க தயாராக இருப்பார்கள் என்பது என் எண்ணம். இவர்கள் அருகில் உள்ள அரசாங்கப் பள்ளிகளில் அவர்களின் திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ப வகுப்புகள் எடுத்து அக்குழந்தைகளின் அறிவைப் பெருக்க உதவலாம். தன்னம்பிக்கை, கலை, வாழ்க்கைக் கல்வி போன்ற பல தேர்வுகள் சம்பந்தம் அல்லாத வகுப்புகள் கூட அவர்களையும் அவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளின் தரத்தையும் உயர்த்தும். நேரத்தை செலவிட முடியாதவர்கள் அவர்கள் படித்த அல்லது அருகில் உள்ள அரசு பள்ளிகளின் தேவையுணர்ந்து சிறு சிறு பொருளாதார உதவிகளை வழங்கலாம் அல்லது அப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை ஊக்கப்படுத்தலாம். உதாரணமாக வெளிநாட்டில் வாழும் என்னைப்போல சில நண்பர்கள் சேர்ந்து எங்களது பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு ஒரு ஆசிரியரை நியமித்து மாத சம்பளத்தை நாங்கள் வழங்கி வருகிறோம். இந்த உதவி அப்பள்ளிக் குழந்தைகளுக்கும் அந்த ஆசிரியருக்கும் பேருதவியாக உள்ளது.
முக்கியமான மற்றொன்று. உங்கள் குழந்தைகளுக்கு தோல்விகளையும் பழக்குங்கள். எதார்த்தத்தை எடுத்துரையுங்கள். இன்றய தலைமுறையினர் பலர் தோல்விகளை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலைக்கு தயாராகின்றனர். இன்றைய செய்திகள் பல இதை உறுதி செய்கிறது. தேர்வில் தோல்வி, காதலில் தோல்வி போன்ற உணர்வுப் பூர்வமான தோல்விகள் இவர்களை எளிதில் தற்கொலையின் பக்கம் நகர்த்திச் சென்றுவிடுகிறது. நாம் ஒவ்வெருவரையும் ஒவ்வொரு வினாடியும் கவனித்துக் கொண்டிருக்க முடியாது. நாம் கொடுக்கும் அளவுக்கு அதிகமான செல்லம், வசதி வாய்ப்பை மீறி அவர்களுக்கு ஏற்படுத்தித் தரும் வசதிகள் அபாயகரமானது. குழந்தைகளை எதார்த்தத்தில் வளருங்கள். நல்ல பல புத்தகங்களை அவர்களுக்குப் பழக்குங்கள். கூட்டுக்குடும்ப முறை ஒழிந்து தனிக்குடும்ப ஒற்றைக் குழந்தை வளர்ப்பு முறையில், பெற்றோர் இருவரும் பணிக்குச் செல்லும் சூழ்நிலையில் வளரும் குழந்தைகளும் நல்ல நண்பர்கள் சிறந்த புத்தகங்களாகக் கூட இருக்கலாம்.
வல்லரசு என்பது மத்திய வங்கி வெளியிடும் வெற்றுத் தாள்களில் இல்லை. எல்லையில் குவித்திருக்கும் எண்ணிலடங்கா படைகளில் இல்லை. அது ஒவ்வொரு குடிமக்கள்களின் மனதில், அவர்களின் வாழ் வாதாரங்களில், நம்பிக்கையில், பங்களிப்புகளில் உள்ளது.
தோள்கொடுங்கள் தோழர்களே! எதிர்கால இந்தியா நம் கைகளில்!
-- லிங்கேஷ்.
3 comments:
தோல்விகளின் தாக்கத்தை குழந்தைகளுக்கு பயிற்றுவித்தாலே பல பிரச்சனைகள் முடிவுக்கு வந்து விடும். சிறப்பான பகிர்வு.
தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி ஜோதிஜி அவர்களே.
அரசாங்கப்பள்ளி என்னும் மாடு வேண்டுமானால் இன்று இளைத்திருக்கலாம் ஆனால் அவை உருவாக்கிய கொம்புகளாகிய நாம் இளைத்ததில்லை.
உண்மையான கூற்று. அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு உரிமை வழங்க கூடாது. ஆனால் சாராயம் விற்கும் அரசிடம் இதை எதிர்பார்ப்பது தவறு. அரசு கல்வி கூடங்களில் திறமையான ஆசிரியவர்கள் உள்ளனர். அவர்களை அரசு ஊக்கபடுத்த வேண்டும். அரசு கல்வி கூடங்களுக்கு கட்டண விதியை நிர்ணயிருத்துருப்பது சற்று மகிழ்வான செய்தி. நடைமுறையில் ?
Post a Comment