படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Monday, February 8, 2010

கனவே கலையாதே!

அமெரிக்காவில் இருந்து இன்று தான் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கி என் உடமைகளை அள்ளிக்கொண்டு வெளியே வந்தேன். வரிசையாக நின்றிருந்த ஆட்டோக்களில் முதலில் நின்றிருந்த ஆட்டோவில் ஏறி அமர்ந்த உடன் ஓட்டுநர் எங்கு செல்லவேண்டும் என்று கேட்டார். நான் சொன்னவுடன் மீட்டரைப்போட்டு ஆட்டோவை செலுத்தினார். சென்னை ஆட்டோவில் மீட்டரா? ஆச்சர்யம் விலகுவதற்குள் விமான நிலையம் கடந்து சாலையில் பயணம் தொடர்ந்தது. சாலையில் இருபுறங்களிலும் உயர்ந்து வளர்ந்த மரங்களுக்கு இடையிடையே அழகுச்செடிகள். காலை நேரத்து மெல்லியத் தென்றல் என் முகத்தில் பட்டு புத்துணர்ச்சியைக் கொடுத்தது. எங்கே போயின சாலையோரக் கடைகள்? மக்கள் நடப்பதற்கும் மிதிவண்டிப் பயணங்களுக்கும் வழிவிட்டுச் சென்றுவிட்டதோ? யோசனையுடன் முன்பக்க சாலையைப் பார்க்கும் போது சிவப்பு விளக்கிற்காக வண்டிகள் நின்றன. பக்கவாட்டுச் சாலையில் உள்ள வாகனங்கள் பச்சை விளக்கு எரிந்தவுடன் வரிசையாகச் சென்றன. வாகனங்களில் இருந்து வெளியேரும் கரும்புகையும் இரைச்சலும் வெகுவாக குறைந்திருப்பதாக உணர்கிறேன். ஓட்டுநர் என் எண்ணத்தை களைத்தார். அவர் ஒரு பட்டதாரி என்றும் இது அவரின் சொந்த வாகனம் என்றும் தற்பொழுதெல்லாம் நிம்மதியாக தொழில் செய்ய முடிவதாகவும் வருமானம் திருப்தியளிப்பதாகவும் கூறிக்கொண்டிருந்தார். அவரின் பேச்சைக் கேட்டுக்கொண்டே என் தேடலைத் தொடர்ந்தேன். அடுத்த சிவப்பு விளக்கிலும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இடம் வந்தவுடன் இறங்கி மீட்டர் காட்டிய தொகையை தந்து விட்டு "வழியில் ஒரு போக்குவரத்து காலவரையும் காணோமே" என்ற என் சந்தேகத்தை அவரிடம் கேட்டேன். திடீரென்று குலுங்கி நின்ற ஆட்டோ என் தூக்கத்தை கலைத்தது. சார் வழியில் அரசியல் ஊர்வலம். இதற்குமேல் போகமுடியாது இறங்கி நடந்து செல்லுங்கள் என்று கூறினார் ஓட்டுநர்.

என்னால் கனவென்று ஒதுக்கவோ ஒதுங்கவோ முடியவில்லை. எதற்கெடுத்தாலும் அரசியல்வாதிகளையும் அரசாங்கத்தையும் குறை கூறிக்கொள்ளும் நாம்மால் எதுவும் செய்ய முடியாதா?

சுய ஒழுக்கம், நேர்மை, கட்டுப்பாடு, கல்வி, உழைப்பு தான் ஒரு குடும்பத்திலும் பின் சமுதாயத்திலும் பின் ஒரு நாட்டிலும் பிரதிபலிக்கிறது. என்னைப் பொறுத்தவரை பெரும்பாலான சக மனிதர்களின் ஒழுக்கமும், கட்டுப்பாடும், நேர்மையும் தான் அம் மக்களை ஆளுபவர்களின் மூலம் வெளிப்படுகிறது. தனி மனிதனிடம் ஏற்படாத எந்த மாற்றமும் சமுதாயத்திலும் சரி நம்மை ஆள்பவர்களிடமும் சரி ஏற்பட வாய்ப்பே இல்லை. நம் தவறுகளையும் பிழைகளையும் அடுத்தவர் மேல் சுமத்தி பழக்கப்பட்டு வளர்ந்த நமக்கு இது உறைக்க சில காலங்கள் அல்லது சில பல தலைமுறைகள் கூட ஆகலாம்.

அசிங்கத்தை நடுவீட்டில் வைத்துவிட்டு நாறுகிறது குமட்டுகிறது என்பது போல் அல்லவா இருக்கிறது அரசியல்வாதிகளை விமர்சிப்பது. எதை எங்கு வைக்கவேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்கிறோம். மக்களால் மக்களுக்காக மக்களைக் கொண்டு நடத்தப்படுவதே நம் குடியரசு. நாமும் நம் மக்களும் பிச்சைக்காரர்களாக மாறியிருப்பதற்கு (இலவசங்களை சொல்கிறேன்) நாம் தான் காரணம். பிச்சைக்காரர்கள் இருக்கும் வரை இத்தகைய ஈகை உள்ளங்கள் (அரசியல்வாதிகள்) திருந்தப்போவதில்லை.

நான் இதுவரை மற்றவர்களை பாதிக்கும் ஒரு பொய் கூட சொன்னது இல்லை, ஒரு முறை கூட வாக்களிக்கத் தவறியதே இல்லை, லஞ்சம் கொடுத்ததில்லை, அரசாங்கத்தையும் சட்டத்தையும் ஒரு பொழுதும் ஏய்த்தது அல்லது ஏமாற்றியது இல்லை என்று உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள். நான் யாரையும் குறைசொல்ல வரவில்லை. நான் சொல்ல வருவது என்னவென்றால் எல்லாத் தவறுகளையும் நியாயப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்பதே.

ஒரு பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு ஐந்து லட்சங்கள் வரை செலவு செய்யும் ஒருவரிடம் நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்? பணியில் சேர பத்து லட்சங்கள் வரை செலவு செய்யும் ஒரு அரசு ஊழியரின் லஞ்சத்தை எப்படி ஒழிக்க முடியும்? பள்ளியில் நம் குழந்தைகளின் எல்.கே.ஜி. சேர்க்கைக்கு எழுபத்து ஐந்தாயிரம் ரூபாய் வரை நன்கொடை (லஞ்சத்தின் மறுபெயர்) அளிக்க முன்வரும் நம்மிடம் எங்கே நேர்மை?

தனி மனித ஒழுக்கத்தையும் நேர்மையையும் கட்டுப்பாட்டையும் கல்வியையும் விதைப்பதில் பெரும் பங்கு நம் கல்விக் கூடங்களுக்கு உண்டு. இன்று அவைகளின் சேவையும் நேர்மையும் கட்டுப்பாடுமே தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகிய பிறகு விவாதத்திற்கு உட்பட்டதாகிவிட்டது.

நான் எல்லா தனியார் பள்ளிகளையும் குறை கூறவில்லை. எங்கு அரசு நிர்ணயத்துள்ள கட்டணங்களில் தரமான கல்வி கிடைக்கிறதோ அவைகளை நாம் கட்டயாம் அங்கீகரிக்க வேண்டும்.

கடந்த பதினைந்து இருபது ஆண்டுகளில் தான் தனியார் கல்வி நிறுவனங்கள் பெருத்து விட்டன. இவற்றில் பல, சேவையை மறந்து பணம் சம்பாதிக்கும் தொழில் நிறுவனங்களாக உருமாறிவிட்டன. இவைகளின் கவர்ச்சி விளம்பரங்களில் நாம் மயங்கி வியாபாரத்திற்கு துணைபோய்விட்டோம். மக்களின் ஆதரவையும் அரசாங்கத்தின் ஆதரவையையும் இழந்து இன்று அரசு பள்ளிகள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. "மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது" என்பது பழமொழி. அரசாங்கப் பள்ளிகளில் மட்டுமே படித்த நம்மில் பலர் இன்று நல்ல நிலைமைகளில் தான் உள்ளோம். அரசாங்கப்பள்ளி என்னும் மாடு வேண்டுமானால் இன்று இளைத்திருக்கலாம் ஆனால் அவை உருவாக்கிய கொம்புகளாகிய நாம் இளைத்ததில்லை. அரசாங்கப் பள்ளிகளை மீட்டெடுப்பது அரசின் கடமை மட்டுமல்ல அது நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.

தற்பொழுதுள்ள இளைய சமுதாயத்தில் உள்ள பெரும்பான்மையான குடும்பத் தலைவிகளில் 50% முதல் 60% பேர் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்து கொண்டு குடும்பங்களைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களில் பலர் சிறந்த இளநிலை அல்லது முதுநிலை கல்வி கற்றவர்கள். தெரிந்தோ தெரியாமலோ அவர்களின் அறிவு சரியான முறையில் பயன்படுத்தப்படாமலும் இருக்கிறது. இவர்களில் 5% முதல் 15% சதவீதம் பேர் தாராளமாக அவர்களின் நேரத்தையும் அறிவையும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 அல்லது 3 மணிநேரம் அளிக்க தயாராக இருப்பார்கள் என்பது என் எண்ணம். இவர்கள் அருகில் உள்ள அரசாங்கப் பள்ளிகளில் அவர்களின் திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ப வகுப்புகள் எடுத்து அக்குழந்தைகளின் அறிவைப் பெருக்க உதவலாம். தன்னம்பிக்கை, கலை, வாழ்க்கைக் கல்வி போன்ற பல தேர்வுகள் சம்பந்தம் அல்லாத வகுப்புகள் கூட அவர்களையும் அவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளின் தரத்தையும் உயர்த்தும். நேரத்தை செலவிட முடியாதவர்கள் அவர்கள் படித்த அல்லது அருகில் உள்ள அரசு பள்ளிகளின் தேவையுணர்ந்து சிறு சிறு பொருளாதார உதவிகளை வழங்கலாம் அல்லது அப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை ஊக்கப்படுத்தலாம். உதாரணமாக வெளிநாட்டில் வாழும் என்னைப்போல சில நண்பர்கள் சேர்ந்து எங்களது பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு ஒரு ஆசிரியரை நியமித்து மாத சம்பளத்தை நாங்கள் வழங்கி வருகிறோம். இந்த உதவி அப்பள்ளிக் குழந்தைகளுக்கும் அந்த ஆசிரியருக்கும் பேருதவியாக உள்ளது.

முக்கியமான மற்றொன்று. உங்கள் குழந்தைகளுக்கு தோல்விகளையும் பழக்குங்கள். எதார்த்தத்தை எடுத்துரையுங்கள். இன்றய தலைமுறையினர் பலர் தோல்விகளை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலைக்கு தயாராகின்றனர். இன்றைய செய்திகள் பல இதை உறுதி செய்கிறது. தேர்வில் தோல்வி, காதலில் தோல்வி போன்ற உணர்வுப் பூர்வமான தோல்விகள் இவர்களை எளிதில் தற்கொலையின் பக்கம் நகர்த்திச் சென்றுவிடுகிறது. நாம் ஒவ்வெருவரையும் ஒவ்வொரு வினாடியும் கவனித்துக் கொண்டிருக்க முடியாது. நாம் கொடுக்கும் அளவுக்கு அதிகமான செல்லம், வசதி வாய்ப்பை மீறி அவர்களுக்கு ஏற்படுத்தித் தரும் வசதிகள் அபாயகரமானது. குழந்தைகளை எதார்த்தத்தில் வளருங்கள். நல்ல பல புத்தகங்களை அவர்களுக்குப் பழக்குங்கள். கூட்டுக்குடும்ப முறை ஒழிந்து தனிக்குடும்ப ஒற்றைக் குழந்தை வளர்ப்பு முறையில், பெற்றோர் இருவரும் பணிக்குச் செல்லும் சூழ்நிலையில் வளரும் குழந்தைகளும் நல்ல நண்பர்கள் சிறந்த புத்தகங்களாகக் கூட இருக்கலாம்.

வல்லரசு என்பது மத்திய வங்கி வெளியிடும் வெற்றுத் தாள்களில் இல்லை. எல்லையில் குவித்திருக்கும் எண்ணிலடங்கா படைகளில் இல்லை. அது ஒவ்வொரு குடிமக்கள்களின் மனதில், அவர்களின் வாழ் வாதாரங்களில், நம்பிக்கையில், பங்களிப்புகளில் உள்ளது.

தோள்கொடுங்கள் தோழர்களே! எதிர்கால இந்தியா நம் கைகளில்!

-- லிங்கேஷ்.

Monday, February 1, 2010

சிக்கனமும் ஒரு சேமிப்பே!

உலகப் பொருளாதார மந்தம், வேலையிழப்புக்கள், உணவுப் பற்றாக்குறை, உயரும் உணவுப் பொருள்களின் விலை, பலம் பெற்றுக் கிளம்பிக் கொண்டிருக்கும் புதுப் புது நோய்கள், கட்டுக்கடங்காத பணவீக்கம், மாறிவரும் தட்பவெப்ப/பருவ நிலைகள் - இவைகள் சமீப காலங்களில் நம் கவனத்தை அதிகம் ஈர்ப்பவை. மனித குல வரலாற்றைப் படித்தவர்களுக்கு இவையாவும் புதியவை இல்லை என்றாலும் தற்பொழுதுள்ள சூழ்நிலைகளில் இவற்றினை ஒதுக்கிவிட முடியாதுதான். 

உணவுப் பற்றாக்குறையும் விலைவாசி உயர்வும்:

நாம் அன்றாடம் உபயோகிக்கும் அரிசி, பருப்பு, காய்கறி, எண்ணை வகை உள்பட அனைத்து பொருள்களின் விலைகள் தாறுமாறாக ஏறிவிட்டன. உதாரணத்திற்கு துவரம் பருப்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஓராண்டிற்கு முன் 40 முதல் 45 ரூபாய்க்கு விற்கப்பட்டது தற்பொழுது 75 முதல் 90 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. கிட்டத்தட்ட இரு மடங்கு விலையேறிவிட்டது. 

பணவீக்கம்: 

இன்று உங்கள் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு ரூபாய் 15 ஆயிரம் செலவாகிறது என்றால் இன்னும் ஐந்து வருடங்களில் 6% பணவீக்கத்தில் கணக்கிட்டால் ரூபாய் 20 ஆயிரம் தேவைப்படும். 35 ஆண்டுகள் கழித்து (ஓய்வு வயதில்) தேவைப்படும் தெகை ரூபாய் 1 லட்சத்து 15 ஆயிரம். நம் அரசாங்கத்தின் கணக்குப்படி கடந்த வருடத்தின் சராசரியான பணவீக்கம் என்பது 10.45%. அப்படிப் பார்த்தால் இன்னும் ஐந்து வருடங்களில் தேவைப்படும் தெகை ரூபாய் 25 ஆயிரம். 35 ஆண்டுகள் கழித்து தேவைப்படும் தெகை ரூபாய் 4 லட்சத்து 86 ஆயிரம். இந்த பணம் ஒரு மாதத்திற்கு தேவையானது. 

வேலையிழப்பின் போதோ அல்லது ஓய்வுக்காலங்களின் போதோ உங்களுக்கு மாதம் ரூபாய் 15 ஆயிரம் வருமானம் வேண்டும் என்றால் 20 லட்சங்களை சாரசரியாக 9% வட்டியில் வைத்திருக்க வேண்டும். மாதம் 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வருமானம் வேண்டும் என்றால் சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாயை சாரசரியாக 9% வட்டியில் வைத்திருக்க வேண்டும். இதனுடன் சொந்த வீடு, குழந்தைகளின் கல்வி, எதிர்பாராத மருத்துவச் செலவு போன்ற செலவுகளையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

காரணம் எவையாக இருப்பினும் அதிகம் பாதிக்கப்படுவது நாம்தானே?

சிக்கனமும் சேமிப்பும்: 

சிக்கனமும் சேமிப்பும் குடும்பப் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் உயர்த்தும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. இன்று நம்மில் பலர் நல்ல முறையில் சிக்கனத்தையும் சேமிப்பையும் கடைபிடித்து வருகிறோம் என்பதையும் மறுப்பதற்கில்லை. வங்கி சேமிப்பு, பங்கு வர்த்தகம் சார்ந்த சேமிப்பு, தங்க நகை சேமிப்பு போன்றவைகள் போல சில சேமிப்புக்கள் இங்கே. 

என் உறவினர்கள் வருடத்திற்கு ஒருமுறை அரிசி, பருப்பு (துவரை, தட்டை, உளுந்து, பச்சைப் பயறு), தானியம், புளி, மிளகாய், மஞ்சள் போன்ற பொருள்களை அவைகளின் விளைச்சள் காலங்களில் கிராம சந்தைகளுக்குச் சென்று விவசாயிகளிடமிருந்து மொத்தமாக வாங்கி, பங்கிட்டு, சேமித்து பயன்படுத்துவதை ஆச்சர்யமாகப் பார்த்துள்ளேன். 

100 கிராம் துவரம் பருப்பு வாங்கும் விலைக்கும் 1 கிலோ துவரம் வாங்கும் விலைக்கும் 100 கிலோ துவரம் வாங்கும் விலைக்கும் விலை வித்தியாசம் அதிகம். அதே போல் மொத்தமாக வாங்கும் போது நாம் கணிசமாக சேமிக்கவும் முடியும். சட்டென்று உயரும் விலைவாசியும் நிச்சயம் நம்மை பாதிக்காது. எப்பொழுது எங்கு வாங்குவது, எப்படி பதப்படுத்தி பாதுகாப்பது தொடர்பான அறிவு நிச்சயம் உதவும். 

குடும்ப மருத்துவக் காப்பீடு அவசியம். "எனக்குத்தான் என் நிறுவனம் குடும்ப மருத்துவக் காப்பீடு அளித்துள்ளதே" என்ற உங்களது நியாமான கேள்வி புரிகிறது. வேலை இழந்தாலோ ஓய்வு பெற்றாலோ நிறுவனத்தின் மருத்துவ காப்பீடு பயன்தராது. அதே சமயம் "Pre Existing Dieses" என்று சொல்லப்படுகின்ற நோய்களுக்கு உண்டான காப்பீடு, நீங்கள் நிறுவனம் மாறும் போது ரத்தாகிவிடும். இத்தகைய சிக்கல்களில் இருந்து விடுபட கூடுதலாக ஒரு மருத்துவக் காப்பீடு ஒன்றை எடுத்துக்கொள்வது நலம். அதை தொடர்ந்து புதுப்பித்து வரவும். 

தகுந்த திட்டமிட்ட ஆயுள் காப்பீடு. உங்களது ஆண்டு வருமானத்தைப்போல் குறைந்த பட்சம் 5 முதல் 10 மடங்கு தொகைக்கு ஆயுள் காப்பீடு அவசியம். டேர்ம் (Term Insurance) ஆயுள் காப்பீட்டைப் பற்றி அறிந்து கொள்ளவும். குறைவான பிரிமியம் தொகையில் அதிக காப்பீடு கிடைக்கும். 

வரவு செலவுகளை தினமும் எழுதுங்கள். ஒரு ரூபாய் வரவு அல்லது செலவு என்றாலும் தவறாமல் எழுதி வாருங்கள். ஆறு மாதத்தில் நிச்சயமாக உங்களின் நிதி நிலைமை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்து சேமிப்பு உயரும். குழந்தைகளுக்கு சேமிக்கவும், வரவு செலவு எழுதுவதையும் கற்றுக் கொடுத்து ஊக்கப் படுத்துங்கள். உங்களது வரவு செலவு குறிப்புகளை குடும்ப உறுப்பினர் அனைவரும் படிக்க அனுமதியுங்கள். சேமிக்கவும் சிக்கனமாக இருக்கவும் குடும்ப உறுப்பினர்களின் புரிதல் அவசியம். 

உபயோகப்படுத்திய பொருள்களை பாதுகாத்து வையுங்கள். மறுபயன்பாட்டிற்கோ அல்லது மற்றவர்களுக்கோ பயன்படும். நான் குழந்தையாக இருந்த போது பயன்படுத்திய நடை பழகும் வண்டி (மரத்தால் செய்யப்பட்டது) என் குடும்பத்தில் மற்றொருவர் பயன்படுத்தியது. எனக்குப் பிறகு என் தங்கையும், என் தங்கைக்கு பிறகு என் மாமா குழந்தைகளும் பயன்படுத்தினர். இன்றும் அந்த வண்டி அடுத்த பயன்பாட்டிற்குத் தயராகவே உள்ளது. 

அவசியமே இல்லாமல் வருடத்திற்கு ஓரிரு முறை அலை பேசியை "cell phone" மாற்றிய, ஒவ்வொரு மாதமும் தேவைக்கு மேல் துணிகளை எடுத்த, தினமும் இரண்டு வேளை உணவை (வீட்டில் அம்மா சமைத்துக் கொடுத்தாலும்) விலையுயர்ந்த உணவு விடுதிகளில் உண்ட, என் நண்பன் (நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவன்) சமீபத்தில் வேலையிழந்து தடுமாறிய போது எற்பட்ட தாக்கத்தில் எழுதியது. அவன் சொன்ன ஒரு வாக்கியம் அப்படியே இங்கே "நான் வாங்கிய cell phone களை வாங்காமல் பணத்தை சேமித்திருந்தால் வேலையில்லாமல் இருந்த இந்த ஒன்பது மாதங்களுக்கு அது குடும்பத்தை காப்பாற்ற உதவியிருக்கும்". 

சிக்கனமும் சேமிப்பும் நிச்சயம் கேலிப் பொருளள்ள! 

--லிங்கேஷ்.