அது 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம். நான் கல்லூரி படிப்பின் இறுதியாண்டில் பெங்களூரு நகரத்தில் ஆறு நண்பர்களுடன் ஒரு சிறு வீட்டில் தங்கி கணிப்பொறி துறையில் வேலை தேடி அலைந்து திரிந்து கொண்டு படிப்பிற்கான பிராஜக்ட் (ஒரு நிறுவனத்தில் சம்பளம் எதுவும் இன்றி) செய்துகொண்டிருந்த காலகட்டம். அப்பா மாதம் தோறும் அவரால் முடிந்த ஒரு சிறு தொகையை என் செலவுக்காக எனது வங்கி கணக்கில் செலுத்திவிடுவார். அந்த மாதம் என் பிராஜக்ட் ரிப்போர்ட்டை கல்லூரியில் முடிக்க (submit) வேண்டியிருந்ததால் அப்பா அனுப்பிய பணம் பிராஜக்ட் ரிப்போர்ட் தயாரிக்கவே செலவாகிவிட்டது. என்னுடன் தங்கியிருந்த நண்பர்களின் நிலையும் அதுவே. மாத முதல் வாரத்தில் தினம் உண்ட மூன்று வேளை உணவு அடுத்த வரத்தில் இரண்டு வேளையும் அதற்கடுத்த வராத்தில் ஒரு வேளையாகவும் குறைந்துவிட்டது. அம்மாதம் 26 ஆம் நாள் காலையில் கையில் ஒருவரிடமும் ஒரு பைசா காசு கிடையாது. வீட்டின் சமையல் அறையில் சமயல் எண்ணெய், உப்பு மற்றும் மிளகாய் தவிர வேறு எதுவும் இல்லை. மீதமிருந்த பருப்பு வகைகளைக் கூட முன்றைய நாட்களில் வேகவைத்து உண்டாகிவிட்டது. பேருந்திற்கான மாதாந்திர பயணச்சீட்டு இருந்ததினால் போக்குவரத்திற்கு சிரமம் இல்லை. இதே நிலை 27 மற்றும் 28 ம் தேதிகளிலும் தொடர்ந்தது. சில நண்பர்கள் அலுவலக்தில் தரும் காபி, தேநீர் உதவியுடன் சற்று மனம் தளராமல் இருந்தனர். இவற்றை அருந்தும் பழக்கமில்லா என் நிலை சற்று கவலை தான். 28 ஆம் தேதி மதியத்திற்கு மேல் என்னால் அலுவலக்தில் இருக்கமுடியாமல் மற்றொரு அறை நண்பருடன் வீட்டிற்கு திரும்பும் வழியில் நான் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் மையம் கண்ணில் பட்டது. என் கணக்கில் 50 ரூபாய்க்கும் குறைவாக இருந்தது என்று நினைவு. இருந்தாலும் என் கணக்கு அட்டையை சொருகி இருப்பைப் பார்த்த போது 100 ரூபாய்க்கு மேல் காட்டியது (உபையம் வங்கியின் அரையாண்டு வட்டி பற்று). உடனடியாக 100 ரூபாயை எடுத்துக்கொண்டு அரிசி, பருப்பு, காய்கறிகள் வாங்கி சமைத்து மற்ற நண்பர்கள் வரும் வரையில் நாங்கள் இருவரும் காத்திருந்தோம்.
மூன்று நாட்கள் பட்டினி. கண்முன்னே சமைத்த சாப்பாடு (சாதம், சாம்பார், ரசம் மற்றும் கடையில் வாங்கிய தயிர்). இருந்தாலும் நண்பர்களுக்காக காத்திருப்பது என்று முடிவெடுத்தோம். (நாங்கள் இருவரும் சாப்பிட முடிவெடுத்திருந்தால் மற்ற நால்வருக்கும் எதுவும் மிஞ்சியிருக்காது என்பது வேறு விசயம்).
இதை சற்றும் எதிர்பாராத நண்பர்கள் வழக்கம்போல தாமதமாகத்தான் வந்தார்கள். (அலைபேசி இல்லாததால் தகவல் சொல்ல முடியவில்லை).
அவர்கள் வரும் வரை உள்ள நேரம் என் வாழ்வில் மிகமுக்கியமானது. எனக்கு பலவற்றைக் கற்றுக்கொடுத்தது. முதல் வரியில் குறிப்பிட்டது போல பல அறியாமைகளை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.
ஒவ்வெருவராக வீட்டிற்குள் நுழைந்த போது அவர்களின் முகங்களில் தோன்றி உணர்ச்சிகள். நிச்சயம் என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. எங்கள் வாழ்வின் அந்த மூன்று நாட்கள் கற்றுக்கொடுத்தது ஏராளம். அன்று இரவு எங்கள் அனைவருக்கும் 100 ரூபாயின் அருமையும் பசியின் கொடுமையும் புரிந்தது.
அன்று முதல் ஒரு பருக்கை உணவைக் கூட வீணடிப்பதில்லை என்ற உறுதியுடன் இன்று வரை இருக்கிறேன். நீங்கள் எப்படி?
2 comments:
நல்ல இடுகை. பசி ருசி அறியாது ஆனால் நண்பனை அறியும். :)
That was the great moment in our Life.
-Prem
Post a Comment