படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Monday, May 24, 2010

ஒரு சிறிய நினைவுகூறல்

புரியாமலும், தெரியாமலும், பல சமயங்களில் அறியாமலுமே நாம் சில தவறுகளை செய்துவருகிறோம்.

அது 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம். நான் கல்லூரி படிப்பின் இறுதியாண்டில் பெங்களூரு நகரத்தில் ஆறு நண்பர்களுடன் ஒரு சிறு வீட்டில் தங்கி கணிப்பொறி துறையில் வேலை தேடி அலைந்து திரிந்து கொண்டு படிப்பிற்கான பிராஜக்ட் (ஒரு நிறுவனத்தில் சம்பளம் எதுவும் இன்றி) செய்துகொண்டிருந்த காலகட்டம். அப்பா மாதம் தோறும் அவரால் முடிந்த ஒரு சிறு தொகையை என் செலவுக்காக எனது வங்கி கணக்கில் செலுத்திவிடுவார். அந்த மாதம் என் பிராஜக்ட் ரிப்போர்ட்டை கல்லூரியில் முடிக்க (submit) வேண்டியிருந்ததால் அப்பா அனுப்பிய பணம் பிராஜக்ட் ரிப்போர்ட் தயாரிக்கவே செலவாகிவிட்டது. என்னுடன் தங்கியிருந்த நண்பர்களின் நிலையும் அதுவே. மாத முதல் வாரத்தில் தினம் உண்ட மூன்று வேளை உணவு அடுத்த வரத்தில் இரண்டு வேளையும் அதற்கடுத்த வராத்தில் ஒரு வேளையாகவும் குறைந்துவிட்டது. அம்மாதம் 26 ஆம் நாள் காலையில் கையில் ஒருவரிடமும் ஒரு பைசா காசு கிடையாது. வீட்டின் சமையல் அறையில் சமயல் எண்ணெய், உப்பு மற்றும் மிளகாய் தவிர வேறு எதுவும் இல்லை. மீதமிருந்த பருப்பு வகைகளைக் கூட முன்றைய நாட்களில் வேகவைத்து உண்டாகிவிட்டது. பேருந்திற்கான மாதாந்திர பயணச்சீட்டு இருந்ததினால் போக்குவரத்திற்கு சிரமம் இல்லை. இதே நிலை 27 மற்றும் 28 ம் தேதிகளிலும் தொடர்ந்தது. சில நண்பர்கள் அலுவலக்தில் தரும் காபி, தேநீர் உதவியுடன் சற்று மனம் தளராமல் இருந்தனர். இவற்றை அருந்தும் பழக்கமில்லா என் நிலை சற்று கவலை தான். 28 ஆம் தேதி மதியத்திற்கு மேல் என்னால் அலுவலக்தில் இருக்கமுடியாமல் மற்றொரு அறை நண்பருடன் வீட்டிற்கு திரும்பும் வழியில் நான் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் மையம் கண்ணில் பட்டது. என் கணக்கில் 50 ரூபாய்க்கும் குறைவாக இருந்தது என்று நினைவு. இருந்தாலும் என் கணக்கு அட்டையை சொருகி இருப்பைப் பார்த்த போது 100 ரூபாய்க்கு மேல் காட்டியது (உபையம் வங்கியின் அரையாண்டு வட்டி பற்று). உடனடியாக 100 ரூபாயை எடுத்துக்கொண்டு அரிசி, பருப்பு, காய்கறிகள் வாங்கி சமைத்து மற்ற நண்பர்கள் வரும் வரையில் நாங்கள் இருவரும் காத்திருந்தோம்.

மூன்று நாட்கள் பட்டினி. கண்முன்னே சமைத்த சாப்பாடு (சாதம், சாம்பார், ரசம் மற்றும் கடையில் வாங்கிய தயிர்). இருந்தாலும் நண்பர்களுக்காக காத்திருப்பது என்று முடிவெடுத்தோம். (நாங்கள் இருவரும் சாப்பிட முடிவெடுத்திருந்தால் மற்ற நால்வருக்கும் எதுவும் மிஞ்சியிருக்காது என்பது வேறு விசயம்).

இதை சற்றும் எதிர்பாராத நண்பர்கள் வழக்கம்போல தாமதமாகத்தான் வந்தார்கள். (அலைபேசி இல்லாததால் தகவல் சொல்ல முடியவில்லை).

அவர்கள் வரும் வரை உள்ள நேரம் என் வாழ்வில் மிகமுக்கியமானது. எனக்கு பலவற்றைக் கற்றுக்கொடுத்தது. முதல் வரியில் குறிப்பிட்டது போல பல அறியாமைகளை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.

ஒவ்வெருவராக வீட்டிற்குள் நுழைந்த போது அவர்களின் முகங்களில் தோன்றி உணர்ச்சிகள். நிச்சயம் என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. எங்கள் வாழ்வின் அந்த மூன்று நாட்கள் கற்றுக்கொடுத்தது ஏராளம். அன்று இரவு எங்கள் அனைவருக்கும் 100 ரூபாயின் அருமையும் பசியின் கொடுமையும் புரிந்தது.

அன்று முதல் ஒரு பருக்கை உணவைக் கூட வீணடிப்பதில்லை என்ற உறுதியுடன் இன்று வரை இருக்கிறேன். நீங்கள் எப்படி?

Thursday, May 6, 2010

இட ஒதுக்கீடும் இயலாமையும்






ஒரு குத்துச்சண்டை வீரனுக்கு உடல் வலிமை மிகமுக்கியம். எதிராளியின் அடியைத்தாங்கும் உடல் வலிமையும் திருப்பி அடிக்கும் சக்தியும் அவனுக்கு அவசியம். இவைகள் அடிப்படை தகுதிகள் என்று மட்டுமே சொல்லலாம். மற்ற அனைத்து தகுதிகளும் (புத்திக்கூர்மை, விடாமுயற்ச்சி, சாதூர்யம், அதிர்ஷ்டம், போன்றவைகள்) இந்த அடிப்படையைத் தாண்டியே அமைகிறது.

ஒரு ஓட்டப்பந்தைய வீரனுக்கு பலமிக்க கால்கள் அவசியம். பொதுவாக நம் அனைவருக்கும் கால்கள் என்பது உண்டு. நன்றாக ஓடவும் முடியும். ஆனால் நம்மால் ஒரு ஓட்டப்பந்தையத்தில் வெற்றி பெற முடியுமா என்றால் சங்கடமான பதில் வரும்.

சாதாரண கால்களை ஒருவன் மிகச்சிறந்த பயிற்சியின் மூலம் பலமிக்கதாக மாற்றிக் கொள்ள முடியும். ஒரே சீரான சிறந்த பயிற்சியினை அனைவருக்கும் அளித்தாலும் அது ஒவ்வொருவரின் உடல் மற்றும் மனதைப் பொறுத்தே ஏற்றுக்கொள்ளப்படும்.

போராடத் துணிந்த, திறமையான, சுறு சுறுப்பான, தெளிவான சிந்தனையுடைய, உடல் வலிமையான, ஆரோக்கியமான, மன உறுதியுடைய, நேரத்தின் அருமையுனர்ந்த, பொறுப்பான குடிமக்கள்கள் ஒரு நாட்டிற்கு மிக அவசியம். அவர்களால்தான் ஒரு நாட்டை சீரான முன்றேற்றப்பாதையில் அழைத்துச் செல்லமுடியும்.

ஒரு நாட்டின் முன்றேற்றம் என்பது அந்நாட்டில் உள்ள அனைத்து தர மக்களின் முன்னேற்றத்தில்தான் ஏற்படவேண்டும். சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்தில் நாம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். நமக்கு இதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதே நேரத்தில் வேகமாக முன்னேறும் ஒருவனுக்கு தடை ஏற்படுத்திவிடக் கூடாது.

ஒரு பெரிய அணையைக் கட்டும்போது அல்லது ஒரு செயற்கைக்கோளை வடிவமைக்கும் போது அல்லது ஒரு சிக்கலான நுட்பமான மருத்துவ அறுவைச் சிகிச்சையின் போது, நாம் அனைவரும் எதிர்பார்ப்பது மற்றும் ஒத்துக்கொள்ளக் கூடியது அவைகளின் தரம். தரமான ஒரு வேலையை நிச்சயம் திறமையான ஒருவரால் அல்லது ஒரு திறமையான குழுவால் தரமுடியும்.

புரியும் படியே சொல்கிறேன். ஒரு பள்ளி வகுப்பில் முப்பது மாணவர்கள் படிக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள். அனைவரும் முதல் மதிப்பெண் வாங்குவதில்லை. பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் முதல் மாணவனுக்கும் கடைசி மாணவனுக்கும் ஒருவரே. நம் அரசாங்கம் ஒரு மாணவனை இட ஒதுக்கீடு என்ற பெயரில் ஒரு வகுப்பறைக்குள் அனுமதிப்பதுடன் ஒதுங்கிக்கொள்கிறது. திறமையில்லாமல் ஒருவன் இட ஒதுக்கீட்டின் உதவியுன் வகுப்பில் நுழையும் போது அவனால் மற்ற திறமைசாலிகளுடன் போட்டியிட முடியால் தவிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அரசாங்கம் இதை தவிர்க்க எந்ந முயற்சியையும் கடந்த அறுபது ஆண்டுகளில் செய்யவில்லை.

ஒருவனின் திறமை மேம்பட பல்வேறு சுற்றுப்புற காரணிகளை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதை தவிர்த்து வெறுமனே பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ ஒரு இடத்தை அவனுக்குக் கொடுப்பதனால் நாம் ஒன்றும் பெரிதாக சாதிக்க முடியாது.

மருத்துவத்துறையில் அல்லது பொறியியல் துறையில் இட ஒதுக்கீட்டின் மூலம் நுழையும் தகுதியற்ற ஒருவனால் அவனுக்கும் நம் நாட்டிற்கும் எத்தகைய நன்மையும் ஏற்படப்போவதில்லை. மாறாக ஒரு திறமையான மாணவனின் கல்விக் கனவை இது சிதைத்துவிடுகிறது. எத்தகைய பிரிவைச் சார்ந்த திறமையான மாணவர்களுக்கு எப்போதும் இட ஒதுக்கீடு தேவையே இல்லை.

ஒவ்வொருவருக்கும் சாதி மத மொழி இன பேதங்கள் கடந்து பல பல திறமைகள் உள்ளன. ஒருவனின் திறமைக்கும் தகுதிக்கும் கடின உழைப்புக்கும் உரிய கல்வியும் வேலை வாய்ப்பும் கிடைக்க வேண்டுமே ஒழிய அவனது ஜாதி மத மொழி அடிப்படையில் கிடைக்கக் கூடாது.

தற்பொழுது இட ஒதுக்கீடு என்பது கல்வி, வேலைவாய்ப்பு, பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் கட்டாயமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விரைவில் மகளிர் இட ஒதுக்கீடு என்பதும் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளது.

இட ஒதுக்கீடு இல்லாமல் நம்நாட்டில் பெருவாரியாக உள்ள பின் தங்கிய மக்களை எப்படி முன்னேற்ற முடியும் என்பது நியாயமான கேள்வி. என்னைப் பொறுத்த வரை ஜாதி மதங்களை கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது.

தற்பொழுது நம்நாட்டில் 6 முதல் 14 வயது வரை கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் சமச்சீர் கல்வி முறையையும் தமிழ்நாடு அரசு விரைவில் அமுல்படுத்த உள்ளது. நாட்டில் உள்ள மக்களை பொருளாதாரத்தில் மிக முன்னேறிய, முன்னேறிய, பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய என்று நான்கு வகைகளாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். முதலில் இந்த நான்கு பிரிவுகளில் அனைத்து ஆரம்பப் பள்ளி மாணவர்களை வகைப்படுத்திக் கொள்ளவேண்டும். ஆரம்பக்கல்வி (ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை) கற்கும் பொழுது மாணவர்களை மிக மோசம், மோசம், சுமார், நன்று, மிக நன்று என்று தரம் பிரித்துக்கொள்ள வேண்டும். நன்று மற்றும் மிக நன்று பிரிவுகளில் உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அதிக அக்கரை செலுத்தவேண்டியதில்லை. ஆனால் மிக மோசம் மற்றும் மோசம் என்ற பிரிவுகளில் உள்ளவர்கள் விரைவில் படிப்பை கைவிடும் சாத்தியம் அதிகம். இப்பிரிவில் உள்ளவர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப குறைகள் மற்றும் பிரச்சணைகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் கூடுதல் கவனம் கொண்டு அவற்றைக் களைந்தால் அவர்களை ஆரம்பப் படிப்பு முடியும் தருவாயில் சுமார் பிரிவுற்குள் நகர்த்திக்கொண்டுவர முடியும். அரசாங்கம் அதிக அளவு நிதி மற்றும் திட்டங்களை இதற்குத் தயாரிப்பது அவசியம். ஆரம்பப் படிப்பு முடிந்தவுடன் உயர் நிலைக் கல்வியில் (ஆறு முதல் பத்து வகுப்பு வரை) மீண்டும் இதே போன்று வகைப்படுத்திகொண்டு செயல்பட்டால் மிக மோசம் மற்றும் மோசம் என்ற வகையில் உள்ள மாணவர்களை மேம்படுத்திவிட முடியும். மேல்நிலை வகுப்புகளுக்கு ஒருவன் வரும் போது அவன் நிறை குறைகள் ஆசிரியர்களிடமும் அம்மாணவர்களிடமும் தெளிவாக இருக்கும். அவன் திறமை மற்றும் தகுதிக்கேற்ப துறைகளை தெளிவாக தேர்ந்தெடுக்க உதவும்.

கல்வி நிறுவனங்கள் வர்த்தக நோக்கில் இல்லாமல் சேவை நோக்கில் செயல்படும்போது இது நிச்சயம் சாத்தியமாகும்.

எந்த ஒரு உயர் கல்வியிலும் (கல்லூரி பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளில்) ஒருவன் சேர அவனது திறமையை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். நம் நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அரசு இந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறிய குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை முழுவதும் அம்மாணவரையே சேர வேண்டும். முன்னேறிய குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் 25% அரசு மானியம் தரலாம். பின்தங்கிய குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் 50% முதல் 75% அரசு மானியம் தரலாம். மிகவும் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளலாம். மேலும் அரசு மாணவர்களுக்கு கல்விக் கடன் தடையின்றி சரியான நேரத்தில் கிடைக்க உத்திரவிட்டு கண்காணிக்க வேண்டும்.


கடந்த வாரங்களில் நாளிதழ்களில் வெளியான ஒரு செய்தி என்னை மிகவும் வருத்தமடையச் செய்துவிட்டது. அதாவது நமது அரசு பொறியியல் கல்வியில் சேர உள்ள குறைந்தபட்ட மதிப்பெண்னை 50% ஆக குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இது திறமையற்ற பொறியியல் வல்லுநர்களை அதிக அளிவில் அல்லவா உற்பத்தி செய்துவிடும்.

அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அனைவரும் தரமான கல்வி கற்க வேண்டும் என்பதே எனது ஆசை. அதைத் தர வேண்டியது அரசு மற்றும் கல்வி நிலையங்களின் கடமையும் கூட.

தரமான கல்வியினால் ஒரு தரமான சமுதாயத்தை உருவாக்க முடியும். ஒரு தரமான சமுதாயத்தால் நிச்சயம் ஒரு தரமான முன்னேறிய நாட்டை உருவாக்க முடியும்.

கல்வியில் மட்டுமல்ல இந்த நிலை. அரசாங்க வேலை வாய்ப்புகளும் அரசுத் துறைகளும் தற்பொழுதுள்ள இடஒதுக்கீட்டு முறையினால் பாழ்பட்டுக்கிடக்கிறது. திறமையான ஒருவனிடம் ஒப்படைக்கப்படும் ஒரு வேலை நிச்சயம் திறமையாக செய்து முடிக்கப்படும். செலவு செய்யப்பட்ட நேரமும் பணமும் நிச்சயம் வீண்போகாது. திறமையற்றவன் இடஒதுக்கீட்டின் மூலம் பெற்ற வேலையில் தரம் எப்படி இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

நமக்கு உடனடித் தேவை முடியும் என்ற முயற்சியும் சுறு சுறுப்பான உழைப்பும் மாறுபட்ட சிந்தனையுமே தவிர, வேண்டாம் இந்த பழாய்ப் போன ஓட்டுச் சார்ந்த இட ஒதுக்கீடு முறை.



குறிப்பு: உங்களுடைய கருத்துக்களை தவறாமல் பின்னூட்டத்தில் பதியவும்.