பணமா? உடல் ஆரோக்கியமா? சந்தோஷமா? மகிழ்ச்சியா? நிம்மதியா?
நம் நேரத்தையும், உடல் உழைப்பையும், அறிவையும் எதற்கு பயன்படுத்துகிறோம்? பணம் சம்பாதிக்கத்தானா? பணத்தை சம்பாதித்து விட்டு நாம் எதைப் பெறத் துடிக்கிறோம்? இழந்ததை மறந்து அல்லது இழந்ததை மறைக்க போலியான தேவைகளை உருவாக்கி அல்ப சந்தோஷம் தானே அடைகிறோம்.
பணம் பொருள் சம்பாதிக்க ஆசைப்படும் அளவுக்கும் நாம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோமா?
ஏன் இன்று எல்லாமே வணிகமாகிவிட்டது என்று என்றாவது எண்ணியிருக்கிறோமா? நியாயமான நுகர்வோருக்கு கிடைக்க வேண்டியவை கிடைக்கிறதா? நாம் அளவுக்கு அதிகமாகவும் தேவைக்கு அதிகமாகவும் உபயோகப்படுத்தும் ஒவ்வொன்றும் நமக்கும், நம் அடுத்த சந்ததிகளுக்கும் ஏன் நம் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் கேடு உண்டாக்கிக் கொண்டுள்ளதை உணர்ந்துள்ளோமா? உதாரணத்திற்கு அளவுக்கு அதிகமாக நாம் வாங்கும் ஒவ்வொரு உடையும் ஒரு சக மனிதனின் நிர்வாணத்திற்கு காரணமாக அமைந்துள்ளதை அறிவோமா?
நாம் என்னதான் மருத்துவர், பொறியாளர், கணிபொறி வல்லுனர், சட்ட மேதை, தொழில் அதிபர்கள், சந்நியாசி ஆக இருந்தாலும் நமக்கு உயிர் வாழத் தேவையானது - சுவாசிக்க சுத்தமான காற்று, குடிக்க தூய்மையான தண்ணீர், பசியாற நஞ்சில்லா சத்தான உணவு, உடுக்க உடை, தங்கி நிம்மதியாக உறங்க அமைதியான இடம் தானே? மற்ற தேவைகள் எல்லாம் எங்கிருந்து வந்தது. அவற்றை பெற்றதால் நாம் அடைந்தது என்ன? இழந்தது என்ன?
நம் முன்னோர்களின் தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்கும் நாம் ஏன் நம் அடுத்த சந்ததிகளுக்கு தண்டனை தரவேண்டும்?
ஆசையே துன்பத்திற்கு காரணம். அதே ஆசையால் துன்பத்தைப் போக்க முடியும் என்பதை அறிவோமா? ஆசை எதை நோக்கி உள்ளது, அதன் நியாய தர்மங்களின் விளைவுகளைத் தானே நாம் இப்போது கண்கூடாகக் காண்கிறோம்.
நகரத்திலிருப்பவர்கள் ஏன் கிராமத்து மக்களை இளக்காரமாகப் பார்க்கவேண்டும்? அவர்களை விட நகரத்து வாழ் மக்கள் பெருமைப்பட என்ன இருக்கிற்து? மாவாட்டுவது, அம்மி அரைப்பது, உரல் இடிப்பது, துணி துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது, கூட்டுவது போன்ற வேலைகளுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்தும் நகர வாழ்க்கை எப்படி கிராம வாழ்க்கையை விட மேம்பட்டது.
நம்முடைய தாத்தா பாட்டி எல்லோரும் எப்படி எழுபது முதல் தொண்ணூறு வயது வரை நோய் நொடி இன்றி வாழ்ந்தார்கள். நம்முடைய பெற்றோர்கள் நாற்பது முதல் ஐம்பது வயதுக்குள் சர்க்கரை, இரத்த அழுத்தம், இதய நோய்கள் பெற்றது எதனால்? இன்றைய செய்திகளைப் பார்த்தால் முப்பது வயதில் ஹார்ட் அட்டாக் என்பது சர்வ சாதாரணமாக உள்ளது. ஏன்? இதன் தொடர் விளைவுகளை நாம் எண்ணிப் பார்த்திருக்கிறோமா?
வாழ்க்கையை தொலைத்து, வாழ்நாளைக் குறைத்து எதைப்பெற்று திருப்தி அடைகிறோம்?
நவீன விஞ்ஞானம் மனிதனின் வாழ்நாளை அதிகரித்திருப்பதாக கொக்கரிக்கிறது. உடல் நலத்தைக்கெடுத்து மருத்துவத்தின் மூலமும் நவீன விஞ்ஞானத்தின் மூலமும் நீடித்த வாழ்நாளில் வாழ்வதால் நமக்கு ஆத்ம சந்தோஷம் கிடைக்குமா?
ஒவ்வொரு மனிதனும் வாழும் ஒவ்வொரு நொடியும் இயற்கைக்கு எதிராகவும் இயற்கையை அழித்தும் தான் வலிமையானவன் என்ற போலியான போர்வையில் திரிகிறான். மனிதன் அல்லாத எந்த உயிரினமும் இயற்கைக்கு எதிரான வாழ்க்கையை வாழ்வது இல்லை. பிறகு எப்படி ஆறறிவு சிறந்ததாக இருக்கமுடியும்?
இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு நஞ்சைத் தவிர இவ்வுலகில் நாம் என்ன மிச்சம் வைத்துள்ளோம். அவர்களைப் பொறுத்த வரை நாம் துரோகிகள் தானே?
உங்கள் மனச்சாட்சியைத் தொட்டு சொல்லுங்கள் நாம் மனிதர்களா?
--லிங்கேஷ்.
5 comments:
this poem really good..........plz follow this word u're real life.........don't play u're friends life.
hello lingesh,
really nice..super! excellent !
it's a not a wordings...
it's a feel of heart.
with reg
mallika
கருத்து தெரிவித்த Anonymous மற்றும் mallika அவர்களுக்கு நன்றி.
What an excellent write-up this!! I loved it. Anna, my request - as a continuation of this article why don't you write the approach one could follow to overcome these issues? You had written this article nearly 2 years ago but sad that I didn't read it till now.
Thank you Senthil. The answer is simple, live life close to nature. No hurry burry. Relax. No expectation and no disappointment. Take the life as it comes.
Post a Comment