படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Saturday, April 13, 2013

சிங்கப்பூரும் சிக்கியதும்

 
கடந்த வாரத்தில் அலுவலக வேலை விசயமாக சிங்கப்பூருக்கு பயணப்பட நேர்ந்தது.



ஒரு மாலைப்பொழுதில் விமானத்தில் இருந்து இறங்கி சிங்கப்பூர் குடியேற்ற சோதனையைச் சந்தித்த பொழுது எனது கடவுச் சீட்டினை அந்த அதிகாரியின் கணிப்பொறியால் படிக்க இயலவில்லை.



உடனே வேறொரு அதிகாரி என்னை மிகவும் மரியாதையுடன் அருகில் உள்ள ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றார். அந்த அறைக்குள் சென்றவுடன் அதனுள் இருந்த மற்றொரு அறைக்குள் அழைத்துச் சென்று என்னை ஒரு ஓரமாக நிற்க வைத்தார். அந்த அறையப் பார்த்த பொழுது அது ஒரு சரக்கு அறை (store room) போல் எதுவும் ஒழுங்கில்லாமல் இருந்தது. அடிவயிற்றில் லேசான ஒரு பயம் தொற்றிக்கொண்டது. ஒரு மூலையில் சற்றே பெரிய அளவில் இருந்த ஒரு கணிப்பொறியின் அருகில் அழைத்துச் சென்று எனது வலது இடது கட்டை விரலின் ரேகையினை எடுத்து சோதனை செய்தார்.



உலகில் உள்ள அனைத்து குற்றவாளிகளை என்னுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார் என்று புரிந்தவுடன் மனதிற்கு ஒரு மாதிரியாக இருந்தது. அவரைப் பொறுத்தவரை அந்த நிமிடம் வரை நான் ஒரு சந்தேகக் குற்றவாளி. என் வாழ்கையில் முதன் முறையாக சிறிது நேரம் சந்தேகக் குற்றவாளியாக இருந்தது கூட சிறந்த அனுபவமாக இருந்தது. இரண்டு நிமிடங்களின் முடிவில் அந்த கணிப்பொறி என்னை குற்றவாளி இல்லை என்று சொல்லிவிட்டது. பிறகு ஒரு நல்ல அறையில் அமரவைத்துவிட்டு வேறொரு இடத்திற்குச் சென்று எனது கடவு சீட்டின் விபரங்களை தட்டச்சு செய்து சிறிது நேரத்திலேயே விசா வழங்கி என்னை அனுமதித்துவிட்டார்.



ஒரு முப்பது நிமிட தடுமாற்றம் தாமதம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த கடவு சீட்டு ஒரு ஆண்டுகளுக்கு முன்னால் நியூயார்க் நகரில் உள்ள நம் நாட்டின் தூதரகத்தால் புதுப்பித்து தரப்பட்டது.

அவர்களின் கவனக்குறைவு எனக்கு எவ்வளவு அசெளகரியத்தில் கொண்டுவிட்டது பாருங்கள்.

கருத்து: அடிப்படைகள் சரியாக இல்லாதவரை அவஸ்த்தைகள் தொடரத்தான் செய்யும்.